மாதவிடாய் காலத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்று யாராவது உங்களிடம் சொன்னதுண்டா? தயிர் சாப்பிட்டால் உடல் பிரச்சினை அதிகரிக்கும் என்று சொல்வது உண்மையா? கட்டுக்கதையா? என்பது இன்றளவிலும் விவாத பொருளாகவே உள்ளது. அதுக்குறித்து தான் நாம் இங்கு காணப்போகிறோம்.
மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கு தவிர்த்து பிடிப்புகள், வீக்கம், உடல் வலிகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் கூட வருகின்றன. இந்த நேரத்தில், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். மாதவிடாய் சுழற்சியை நிர்வகிக்க உதவும் சில உணவுகள் இருந்தாலும், அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய சில உணவுகளும் உள்ளன. அதில் தயிரும் ஒன்றா?
மருத்துவர்கள் பார்வையில் புளிப்பு உணவுகளை உண்பதால் கடுமையான பிடிப்புகள் அல்லது அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம் என்பது ஒரு கட்டுக்கதை தான் என்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் தயிரை நன்றாக உட்கொள்ளலாம் எனவும் சொல்கிறார்கள்.
ஃபரிதாபாத்தில் உள்ள ஆசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் தலைமை உணவியல் நிபுணர் விபா பாஜ்பாய் முன்னணி நாளிதழ் ஒன்றிடம் கூறுகையில், “கால்சியத்தின் நல்ல ஆதாரமாக விளங்கும் தயிர் நமது எலும்புகளுக்கும் உடலுக்கும் போதுமான வலிமையைக் கொடுக்க உதவுகிறது. தவிர, தயிரின் புரோபயாடிக் தன்மை வீக்கம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை குறைப்பதில் வேலை செய்கிறது”.
மேலும், மாதவிடாய் காலங்களில் தயிர் சாப்பிடுவது தசை வலி மற்றும் பிடிப்புகள் மற்றும் கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் புளிப்பு உணவுகள் மற்றும் தயிர் சாப்பிடுவதைத் தவிர்ப்பது என்பது பழங்கால நம்பிக்கைகள் மட்டுமே. அவை எந்த வகையிலும் உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்காது”.
உண்மையில், தயிர் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிப்பதில் உதவுகிறது, இது பெரும்பாலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வீக்கம் அல்லது மலச்சிக்கல் வாய்ப்புகளை குறைக்கிறது. மாதவிடாய் காலத்தில் தயிர் சாப்பிடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று மோர் அல்லது லஸ்ஸி வடிவத்தில் உள்ளது, ஏனெனில் இது நம் உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது மற்றும் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் யாவை?
உங்கள் மாதவிடாய் நாட்களில் உங்களின் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டியவை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம். கூடுதல் காரமான உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
மேலும் காபி அருந்துவதைத் தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்ள வேண்டும். மது அருந்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாதவிடாய் காலங்களில் கூறப்படும் கட்டுக்கதைகளை புறந்தள்ளுங்கள்.
மேலும் காண்க:
தொடரும் கனமழை- இன்று 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
பான் கார்டு குறித்து முக்கிய அறிவிப்பு- இப்பவும் மிஸ் பண்ணாதீங்க