பூவுக்கெல்லாம் அரசன் என்பதால் இது பூவரசு என்று பெயர் பெற்றது. நூற்றாண்டு கடந்து வாழக்கூடிய மரங்களுள் பூவரசு மரமும் ஒன்றாகும். இந்த பூவரசு மரத்தை இன்றும் கிராமங்களில் வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பதை நம்மால் காண முடியும்.
இதன் இலை, பூ, காய், விதை, மரப் பட்டை என அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த மருந்தை சாப்பிட்டு வந்தால் உணவில் உப்பின் அளவு குறைக்க வேண்டும்.
பூவரசு மரப் பட்டையை பொடித்து அத்துடன் சந்தனத்தூள் அல்லது வில்வக் கட்டை தூள் கலந்து முகத்தில் தேய்த்து வர முகம் பொலிவடையும்.
பூவரசங் காயை இடித்து சாறு பிழிந்து அந்த சாறை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறையும்.
பூவரசு மரப் பட்டையுடன், பூவரசன் காய், பூவரசன் பூவை இடித்து பொடியாக்கி காலை மற்றும் மாலை என இரு வேலையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர தோல் நோய்கள் நீங்கும்.
பூவரசு மரத்தின் வேர் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அதில் இருந்து 50 மி.லி நீர் எடுத்து அத்துடன் 10 மி.லி விளக்கெண்ணெய் சேர்த்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வர மூல நோய் குணமாகும்.
சர்க்கரை நோய் இருப்பவர்களின் உடலில் காயம் ஏற்பட்டால் அது எளிதில் ஆறாது. அதற்கு மருந்தாக இந்த பூவரச பூவை நீரில் கொதிக்க வைத்து, பின்னர் அந்நீர் ஆறிய பிறகு அதை கொண்டு தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களில் கழுவி வர விரைவில் குணமாகும்.
பூவரசு பட்டையை பாலில் அவித்து, உலர்த்தி அத்துடன் சம அளவு பரங்கி பட்டை சேர்த்து சூரணம் செய்து கொள்ள வேண்டும். அந்த சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் சேர்த்து காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர நாள் பட்ட தொழு நோய் சிறிது சிறிதாக குணமாகும்.
நல்லெண்ணெயில் பூவரசு பூவை வதக்கி அதை உடலில் வீக்கம் ஏற்பட்டுள்ள இடங்களில் கட்டி வர வீக்கம் குறையும்.
பூவரசன் பூவை நசுக்கி நீரில் கொதிக்க வைத்து, பின்னர் பாதியாக நீர் சுண்டிய பிறகு வடிகட்டி காலை மற்றும் மாலை நேரங்களில் குடித்து வர பூச்சி கடி, வண்டு கடி போன்றவற்றால் ஏற்பட்டுள்ள ஊறல் நோய் குணமாகும். இதே போல் முன்று நாட்கள் குடித்து வந்தால் விஷக்கடியால் ஏற்பட்டுள்ள ஊறல், அரிப்பு, வீக்கம், தடிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
K.Sakthipriya
Krishi Jagran