இயற்கை நமக்கு அளித்த எண்ணற்ற கொடையை நாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தது.அதில் அழியும் தருவாயில் பத்து லட்சம் உயிரினங்கள் இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலையும் கொடுத்திருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான செடிகள், மரங்கள், விலங்குகள்,கடல் வாழ் உயிரினங்கள், பறவையினங்கள், பூச்சி இனங்கள் என எண்ணற்ற உயிரினங்கள் அடங்கும்.
பண்டை தமிழரும், இலுப்பை மரமும்
பழந்தமிழர்களின் வாழ்வியலில் பிரிக்க முடியாத அங்கமாக இந்த இலுப்பை மரங்கள் இருந்து வந்தன. இருளை விலக்கிய பெருமை இலுப்பைக்கு உண்டு, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்தில் கோயில்கள், வீடுகளில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய்தான் பயன்படுத்தினர். நின்று நிதானமாக எரியும் என்பதால் பழங்காலங்களில் தீவட்டிகளில் இந்த எண்ணெய்யே பயன்படுத்தப்பட்டது. பல மன்னர்கள், எண்ணெய்க்காகவே இலுப்பைத் தோப்புகளை உருவாக்கி, அவற்றை கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தார்கள். பழந்தமிழர்கள் இந்த இலுப்பைப்பூவையும், பழத்தின் சதைப்பகுதியையும் நொதிக்க வைத்துச் சோமபானம் என்ற மதுவை தயாரித்து அருந்தினர். இது உடலுக்குத் தீங்கு விளைவிக்காத மதுவாக இருந்தது.
பண்டை தமிழரின் அடையாளமாகவும், வாழ்வியலில் தொடர்புடையதாகவும் இருந்த 'இலுப்பை மரம்' பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?.. இன்று அழிவின் தருவாயலில் இருக்கிறது. அரை நூற்றாண்டிற்கு முன்பு வரை தமிழகத்தில் 30,000-க்கும் அதிகமான மரங்கள் இருந்ததிற்கான சான்றுகள் உள்ளன. 2015-ம் ஆண்டுக் கணக்கின்படி 10, 000-க்கும் குறைவான மரங்களே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்பொழுது இதன் எண்ணிக்கை மேலும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.
இலுப்பை மரத்தின் தாயகம் தமிழகமே. ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா,கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இவ்வகை மரம் காணப்படுகிறது. அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் இந்த மரம் காணப்படுகிறது.
பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இன்றளவும் இலுப்பையிலிருந்து தயாரிக்கும் பானமே பிரதான மதுவாகவும் இருந்து வருகிறது. இதற்காக, வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இலுப்பைப்பூக்களை சேகரித்து வந்து மது தயாரிக்கிறார்கள்.
இலுப்பை மரம்
இலுப்பை மரத்தின் தாயகம் தமிழகமே. ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா,கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இவ்வகை மரம் காணப்படுகிறது. அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் இந்த மரம் காணப்படுகிறது.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் இலைகள் உதிர்ந்து விடும். ஜனவரி மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் துளிர் விட ஆரம்பிக்கும். ஏப்ரல் மாதம் முதல் வரை பூக்கள் பூக்கும், இறுதியாக மே, ஜூனில் பழங்கள் வந்து விடும்.
இலுப்பை மரம் முளைத்து பத்து வருடங்களுக்கு பின்பு தான் பலன் கொடுக்கும். இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். குறைந்தது ஐந்து தலைமுறையினரை பார்க்க கூடிய மரம்... அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.
“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை”
அன்று வழக்கத்திலும், பேச்சு புழக்கத்தில் பயன்படுத்தப் பட்ட பழமொழி. காரணம் ஒரு வருடத்திற்கு மட்டும் இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ வரை பூ பூக்கும். இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் வரை தயாரிக்கலாம்.
இலுப்பை எண்ணெய்
ஆண்டொன்றுக்கு ஒரு மரத்திலிருந்து 200 கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் வரை எடுக்கலாம். இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணியாகவும், சமையலுக்கு பயன்படும் எண்ணெயாகவும் பயன்படுத்தப் பட்டது.
இலுப்பை ஆல்ககால்
ஒரு டன் பூவிலிருந்து நானூறு கிலோ ஆல்ககால் வரை தயாரிக்கலாம். இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது.
இலுப்பை மரத்தின் பயன்கள்
- இலுப்பை மரத்தின் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு என அனைத்தும் மருத்துவ குணமுடையது. சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக பாம்பு கடி, வாத நோய், சக்கரை வியாதி, சளி , இருமல் மூலநோய், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு, காயம் ஆகிய அனைத்திற்கும் நிவாரணியாக இந்த மரம் இருந்து வருகிறது. சித்த மருத்துவத்தில் இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாக கூறப் படுகிறது.
- இலுப்பை மரம் விறகாக மட்டுமின்றி மரச் சாமான்கள், சமையல் பாத்திரங்கள், மாட்டு வண்டி சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும் உப்பு நீரை அதிகமாகத் தாங்கும் தன்மை கொண்டதால் பரவலாக இன்றளவும் இம்மரமே படகுகள் செய்ய அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
- விவசாய நிலங்களில் இலுப்பை மரத்தை நட்டு வைத்தால் இதன் பழங்களை உண்பதற்கு வண்டுகள், பறவைகள், குறிப்பாக வௌவால் போன்றவைகள் வரும். இதில் படையெடுத்து வரும் பல்லுயிர்களும் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
- பணம் கொழிக்கும் மரம் என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஒரு ஏக்கருக்கு சுமார் 150 முதல் 180 மரங்கள் வரை நட்டு வளர்க்கலாம். 60 ஆண்டுகள் கழித்து ஒரு மரத்தின் விலை 2 லட்சத்துக்கும் மேல் விலைபோகும். இதன் பூ , பட்டை, சர்க்கரை , புண்ணாக்கு , சாராயம், சிகைக்காய் ஆகிய அனைத்துமே விற்பனைக்குரியது.
- எல்லா வற்றிற்கும் மேலாக இலுப்பை மரங்கள், மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம் கொண்டது.
சிந்திக்க வேண்டிய தருணம்
ஒவ்வொரு மரத்தின் அழிவிற்கு பின்னால் அதைச் சார்ந்திருக்கும் பிற உயிரினங்களும் மறை முகமாக அழிந்து வருகின்றன என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் தண்ணீர் பற்றக்குறை, நம்மை தாக்கும் டெங்கு போன்ற நோய் ஏற்படுதற்கும், மரங்களின் அழிவிற்கும் எதோ ஒரு வகையில் தொடர்பு உண்டு... வெளவாலுக்குப் பிடித்த பழம் இலுப்பை பழங்கள் தான். இலுப்பை மரங்களின் அழிவும் கூட வெளவாலின் அழிவுக்கு ஒரு காரணம் தான். கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சிக்கும் வெளவாலின் அழிவும் ஒரு காரணம் தான். இலுப்பையை அழிவிலிருந்து மீட்க வேண்டியது அனைவரின் கடமை.
Anitha Jegadeesan
Krishi Jagran