உங்களது தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் நல்ல தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்வது என்பது அவசியமாகும்.
ஒருவேளை உங்களால் ஆழமான தூக்கத்தை மேற்கொள்ள முடியவில்லையா அல்லது இரவில் தூங்கும் போது அடிக்கடி விழிப்பு ஏற்படுகிறதா, அப்படியானால் உங்கள் பழக்கவழக்கத்தில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். ஒருவரால் சரியாக தூங்க முடியாமல் போனால், அதனால் மனம் மற்றும் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் போனால், அதனால் பக்கவாதம், ஆஸ்துமா, பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம், உட்காயங்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவை வரும் அபாயம் அதிகம் இருக்கும். தூக்கம் மனநிலையை எப்படி பாதிக்கும் என்று கேட்கிறீர்களா? ஒருவர் நல்ல தூக்கத்தை மேற்கொள்ளாமல் போனால், அதனால் மன இறுக்கம், பதற்றம், குழப்பம் மற்றும் விரக்தி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதோடு மோசமான தூக்கம் பல விபத்துக்களையும் உண்டாக்கும் மற்றும் அலுவலகம் அல்லது பள்ளியில் கவனத்தை செலுத்த முடியாமல் தடுக்கும். இதுப்போன்று ஒருவரது மோசமான தூக்கம் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
அறை வெப்பநிலை
படுக்கை அறையின் வெப்பநிலை கூட ஒருவரது தூக்கத்தைப் பாதிக்கும். அதிலும் ஒருவர் தூங்கும் அறையானது மிகவும் வெதுவெதுப்பாக இருந்தால், உடலின் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பித்து, தூக்கத்தில் இடையூறை உண்டாக்கும். எனவே எப்போதும் உறங்கும் அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படி குளிர்ச்சியான அறையில் தூங்கினால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
மோசமான படுக்கை
ஒருவரது படுக்கை கூட, தூக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மோசமான சுகாதாரத்தைக் கொண்ட மிகவும் பழைய படுக்கையில் தூங்கினால், அது தூக்கத்தை பாதிக்கும். இம்மாதிரியான படுக்கையில் தூங்கும் போது, அது மிகுதியான களைப்பை உண்டாக்குவதோடு, தூங்கி எழ முடியாமல் தடுக்கும். எனவே சுத்தமான மற்றும் சுகாதாரமான படுக்கையில் தூங்குங்கள். அதேப் போல் படுக்கை மிகவும் கடினமாகவோ அல்லது மிகவும் மென்மையாகவோ இருக்கக்கூடாது.
மிகவும் கடினமான படுக்கையில் தூங்கினால், அதனால் உடல் வலியால் அவஸ்தைப்படக்கூடும். எனவே எப்போதும் படுக்கையை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். முக்கியமாக 10 வருடத்திற்கு ஒருமுறை படுக்கையை மாற்றுங்கள்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிலும் ஒருவர் இரவில் தூங்குவதற்கு முன் புகைப்பிடித்தால், அதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவஸ்தைப்படக்கூடும். சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் மன இறுக்கத்தை உண்டாக்கி, ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியாமல் தவிர்க்க வைக்கும். ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
செல்போன் உபயோகிப்பது
இரவில் தூங்கும் முன் பலருக்கும் மொபைலைப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். இப்படி ஒருவர் தூங்குவதற்கு முன் மொபைலைப் பயன்படுத்தினால், அதனால் தூக்க பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மொபைலில் இருந்து வெளிவரும் வெளிச்சம், ஒருவரது உடலில் உள்ள ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, தூக்கத்தை கலைத்து விழிப்பை ஏற்படுத்தும். மேலும் தூங்கும் போது மனதில் செல்போனை நினைத்துக் கொண்டே இருந்தால், மூளையின் செயல்பாட்டு துண்டிவிடப்பட்டு, தூக்கம் கிடைக்கப் பெறாமல் செய்யும்.
குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவது
இரவில் தூங்கும் முன் மேக்கப்பை நீக்குவது நல்ல பழக்கம் தான். பலரும் திறந்த சருமத் துளைகளை மூடுவதற்கு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இச்செயலால் ஒருவரது தூக்கம் தான் பாதிக்கப்படும். குளிர்ந்த நீர் உடலில் ஆற்றலை வெளியிடச் செய்து, ஒருவரை நன்கு விழித்திருக்கச் செய்யும். எனவே மாலை வேளை வந்தால், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவாமல், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். அதேப் போல் இரவில் நல்ல தூக்கம் வர வேண்டுமானால், வெதுவெதுப்பான நீரால் சிறு குளியல் மேற்கொள்ளுங்கள்.
இரவு நேர காபி
சிலருக்கு இரவு உணவு உட்கொண்ட பின் ஒரு கப் ப்ளாக் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இப்பழக்கம் இரவில் தூக்கம் வராமல் தாக்கத்தை உண்டாக்கும். இதற்கு காபியில் உள்ள காப்ஃபைன் தான் காரணம். இப்பழக்கமே ஒருவருக்கு தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்குகிறது. மேலும் எப்போதும் இரவு தூங்குவதற்கு குறைந்தது 6 மணிநேரத்திற்கு முன்பு காபி குடிக்காதீர்கள்.
புதினா டூத்பேஸ்ட்
இரவில் தூங்குவதற்கு முன் பற்களைத் துலக்குவது நல்ல பழக்கம் தான். ஆனால் புதினா ப்ளேவர் கொண்ட பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்காதீர்கள். ஏனெனில் இது இரவு நேரத்தில் விழிப்பை உண்டாக்கி, தூக்கத்தைப் பாதிக்கும். வேண்டுமானால் புதினா இல்லாத டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்குங்கள்.
செல்லப் பிராணிகளுடன் தூங்குவது
உங்கள் செல்லப் பிராணிகள் மிகவும் விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் செல்லப் பிராணிகளை படுக்கை அறையில் அனுமதித்தால், அதனால் தூக்கத்தில் இடையூறு ஏற்படும். செல்லப் பிராணிகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். ஆனால் தூக்கம் என்று வரும் போது, மனிதர்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும் வேறுபடும். எனவே இரவில் நல்ல தூக்கத்தைப் பெற வேண்டுமானால், செல்லப் பிராணிகளை படுக்கை அறைக்குள் அனுமதிக்காதீர்கள்.
நைட்-ஷிப்ட் வேலைகள்
நைட்-ஷிப்ட் வேலைகளும் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கும். முக்கியமாக இம்மாதிரியான வேலை செரடோனின் என்னும் நல்ல மனநிலையில் வைத்திருக்கும் ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தடுக்கும். மேலும் நைட்-ஷிப்ட் வேலை பார்ப்போர், பகலில் நன்கு தூங்கலாம் என்று நினைப்பர். ஆனால் பகலில் வரும் வெளிச்சம் மற்றும் வெப்பத்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. மேலும் நைட்-ஷிப்ட் வேலைப் பார்த்தால், இதய நோய் மற்றும் இரைப்பை நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும்.
தனிமை
தனிமையும் ஒருவரது தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தனிமையில் இருக்கும் பெரும்பாலான மக்கள், சற்று மன இறுக்கத்துடனும், டென்சனாகவும் இருப்பர். இவை இரண்டும் ஒருவரிடம் இருந்தாலே, தூக்கத்தைத் தொலைக்க வேண்டியது தான். எப்போதும் தனிமையில் உள்ளவர்கள், களைப்பை உணராமல் தான் இரவு தூக்கத்தை மேற்கொள்கிறார்கள். இதனாலேயே தனிமையில் இருப்பவர்கள், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில்லை.