மழை, பனி போன்ற குளிர்காலத்தில் சுற்றுப்புறச் சூழலின் வெப்பம் குறைவாக இருப்பதால் உடலில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் நாம் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து வீட்டிலேயே சமைத்து உண்ண வேண்டும்.
மழை மற்றும் குளிர் காலத்தில் மண்ணுக்கு அடியில் பயிரிடப்பட்ட உணவுகளையோ அல்லது மண்ணுக்கு மிக நெருக்கத்தில் உள்ள காய்களையோ கிழங்கு வகைகளையோ பயன்படுத்த வேண்டாம். தொற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மண்ணிலிருந்து உயரத்தில் வளர்ந்து இருக்கக்கூடிய கீரைகளையோ காய்கனிகளையோ பயன்படுத்தலாம். முக்கியமாக, ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள பூண்டு, மிளகு, மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கசப்பு, துவர்ப்புச்சுவை உடைய உணவுகளையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளில்தான் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு உதவும்.