சாலை விபத்துக்கள் பெரும்பாலும் தானாக நடப்பதில்லை. கவனக்குறைவு, பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது போன்ற பல்வேறு காரணங்களால், நாம் தான் விபத்தை ஏற்படுத்துகிறோம்.
விதிமீறல் செய்யும் டூ - வீலர், கார் ஓட்டுனர்களால் அதிகம் விபத்துக்களை சந்திப்பது பாதசாரிகளும், சைக்கிளில் செல்பவர்களும். கவனக்குறைவு, அதிவேகத்தால் விபத்தை ஏற்படுத்தியவர்கள், அடிபட்டவர்களை அப்படியே விட்டு செல்வதும் வாடிக்கையாகி விட்டது.
இதனால் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காதது, விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி பல லட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
பொன்னான நேரம்
விபத்தில் அடிபட்ட அடுத்த 60 நிமிடங்கள் வாழ்விற்கும், இறப்பிற்கும் இடையிலான பொன்னான நேரம். இந்த 60 நிமிடங்களுக்குள் அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்து விட்டால், உயிரை காப்பாற்றுவது எளிது.
சாலை விபத்தில் அடிபட்டால், வெளியில் ரத்தம் வடிந்தால் தான் அனைவரும் பதறுகிறோம். காயம் பட்ட இடங்களில் ஒன்றுக்கும் அதிகமாக எலும்பு முறிவு ஏற்படலாம். பல நேரங்களில், ரத்தம் வெளியில் வடியாது.
ஆனால் விபத்து ஏற்படுத்திய பாதிப்பால், உடலின் உட்பகுதி சிதைந்து, ஒரு சொட்டு ரத்தம் கூட வெளியில் வராமல், ரத்தக் கசிவு முழுதும், வயிற்று பகுதியிலோ, மார்பு பகுதியிலோ கசியும். இரண்டு - நான்கு லிட்டர் வரை கூட ரத்தம் வடியலாம்.
விலா எலும்பு முறிவு ஏற்பட்டால், பஞ்சு போன்று இருக்கும் நுரையீரலின் உள்ளே 2லிட்டர் வரை ரத்தக் கசிவு ஏற்படலாம். மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் வரை ரத்தம் இருக்கும். இதில் பாதிக்கும் மேல் வெளியில் தெரியாமல் உள்ளேயே கசிந்தால், உடலின் பிரதான உறுப்புகளுக்கு போதுமான அளவு ரத்த அழுத்தம் இல்லாமல், இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற உறுப்புகள் ரத்த ஓட்டம் இல்லாமல், திசுக்கள், செல்கள் அழிந்து, நிரந்தரமான பாதிப்பு உண்டாகும்.
மருத்துவ உதவியாளர்கள்
நாடு முழுதும் உள்ள, '108' ஆம்புலன்ஸ் சேவையில், பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர். முதலுதவிக்கான அனைத்து வசதிகளும் அதில் உள்ளது. விபத்து நடந்த உடன் உடனடியாக அவர்களை அழைத்து கொண்டு, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அடிப்படை முதலுதவி கிடைத்து விடும். அதன்பின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விடலாம்.
டாக்டர் ஜே.ராம் பிரசாத்,
தலைவர், எலும்பு முறிவு
அறுவை சிகிச்சை பிரிவு,
மியாட் மருத்துவமனை, சென்னை.
மேலும் படிக்க
கொரோனாவைக் குணப்படுத்த வந்தாச்சு மாத்திரை: பிரிட்டனில் அனுமதி!