மருத்துவ உலகில் தேயிலை மர எண்ணெய்க்கு முக்கிய இடம் உண்டு. ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரமான Tea tree oil அங்கு பல நூற்றாண்டுகளாக மருத்துவ காரணங்களுக்காக உபயோகிக்கப்பட்டு வருகிறது.
Tea tree என்றதுமே உடனே ஒரு சந்தேகம் வரலாம். நாம் வழக்கமாக சாப்பிடும்/அருந்தும் தேநீருக்கான தேயிலையிலிருந்து Tea tree oil தயாராகிறதா என்று கேள்வி எழும். ஆனால், மருத்துவ உலகில் பயன் படுத்தப்படும் Tea Tree என்பதும், தேநீருக்காகப் பயன்படுத்தப்படும் Tea plant என்பதும் வேறுவேறு. இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேயிலை என்பது நாம் உட்கொள்ளக் கூடியது. ஆனால், Tea tree என்பது நச்சுத்தன்மை கொண்டது என்பதால் உட்கொள்ளக் கூடாது. மேற்புறமாக மட்டுமே பயன்படுத்த வேண்டியதாகும்.
பயன்கள்
- பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட சருமத் தொற்றுநோய்கள், புரோட்டோசோல் தொற்றுநோய்கள் மற்றும் சளிச்சுரப்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிரான ஆன்டிமைக்ரோபியல் (Anti-Microbial) செயல்பாடுகளை Tea tree oil கொண்டுள்ளது.
- காயங்களை விரைந்து குணப்படுத்துதல், சருமப் புற்றுநோயைப் (Cancer) பரவ விடாமல் கட்டுப்படுத்துதல் முதலான சிறப்பு தன்மைகள் இந்த எண்ணெய்க்கு உண்டு.
- Terpinen - 4 என்ற வேதிப்பொருள் தேயிலை மர எண்ணெயின் முக்கியக் கூறாகும். இந்த Terpinen - 4 பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக் கூடியது.
- தேயிலை மர எண்ணெயினை மரத்திலிருந்து எடுத்து அப்படியே பயன்படுத்துவது இல்லை. அதை குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு நீர்த்துப் போக செய்த பிறகே பயன்படுத்துகிறார்கள். சராசரியாக 5 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலும் வேறு வேறு முறைகளில் நீர்த்துப் போக வைத்தே (Dilute) பயன்படுத்துகிறார்கள்.
- 5 சதவீத தேயிலை மர எண்ணெயைக் கொண்ட ஜெல் முகப்பருவைக் குறைக்க பயன்படுகிறது. இந்த ஜெல்லை முகப்பரு மீது தடவும்போது தோலில் உள்ள பாக்டீரியாக்கள், வீக்கம், அழற்சி மற்றும் அழற்சி அல்லாத பண்புகளைக் கட்டுப்படுத்தி முகப்பருக்களை மறைய செய்கிறது.
- பொடுகைப் போக்கவும் தேயிலை மர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சின்னச்சின்ன பொடுகை போக்குவதற்கு ஷாம்பூக்களில் தேயிலை மர எண்ணெய் 5 சதவீதம் சேர்க்கப்படுகிறது.
- தேயிலை மர எண்ணெய் அதிகம் செறிவூட்டப்பட்ட தாவரவியல் சாறு என்பதால், தோல் அழற்சியை ஏற் படுத்தும். எனவே சரும நல மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
மேலும் படிக்க
தினமும் ஒரு பச்சை வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்!
இதய பாதிப்பைத் தடுக்கும் மிளகின் மருத்துவப் பயன்கள்!