பண்டை தமிழர்கள் பகுத்து வழங்கிய 5 வகை நிலங்களில் மருத நிலமும் ஒன்று. தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்த மருத மரமே மனிதன் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மருத்துவ மரமாக விளங்குகிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட மருத மரத்தின் நன்மைகளையும் அதனை பயன்படுத்தும் முறையையும் பார்ப்போம்.
மருத மரத்தின் இலைகளை நன்கு சுத்தம் செய்து விழுதாக அரைத்து தினமும் காலை வேளைகளில் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு நீங்கும்.
மருத மரத்தில் உள்ள பழத்தை நீராவியில் வேக வைத்து அரைத்து அதை புண்களின் மீது கட்டினால் ஆறாத புண்கள் ஆறும். மரப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு புண்களை கழுவினால் விரைவில் குணமாகும்.
மருத மரத்தின் பூ, காய் ஆகியவற்றை சம அளவில் கொண்டு கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
மருத மரத்தின் பட்டை 200 கிராம் சீரகம், சோம்பு, மஞ்சள் தலா 100 கிராம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக பொடித்து தூள் செய்யவும். பின்னர் அப்பொடியை வெந்நீரில் 5 கிராம் அளவு சேர்த்து தினமும் குடித்து வர ரத்த அழுத்தம் குணமடையும்.
மரத்தின் பட்டையை அரைத்து பொடியாக்கி குடி நீரில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.
ஆடாதோடை இலை சாறுடன் மருதம் பட்டை பொடி சிறிது சேர்த்து ஆட்டுப்பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்படும் உள் காயங்கள் ஆறிவிடும்.
மருதம் பட்டை, கரிசலாங்கண்ணி பொடிகளை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர கல்லீரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் குணமாகும்.
மருதம் இலைகளை நிழலில் உலர்த்தி அத்துடன் சமமான அளவு மாதுளை பழத்தின் தோலை அரைத்து தண்ணீரில் காய்ச்சி கஷாயம் செய்து, பின்னர் அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.
மருதம் பட்டை மற்றும் ஆவாரம் பட்டை இரண்டும் 200 கிராம், சுக்கு மற்றும் ஏலக்காய் தலா 20 கிராம் அனைத்தையும் ஒன்றாக அரைத்த தூள் செய்து பின்னர் தண்ணீரில் 5 கிராம் அளவில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல் காய்ச்சி காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மருத இலைகளை வதக்கி அதனை புண்களின் மீது கட்டி வர புண்கள் குணமாகும்.
இயற்கை பானம்
மருத மரத்தின் பட்டைகளை கொண்டு இயற்கையான முறையில் பானம் தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடி, ஒரு ஸ்பூன் சீரக பொடி இரண்டையும் வெந்நீரில் சேர்த்து நன்கு கலக்கினால் பானம் தயார். சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிடுவதற்கு பின்னரோ குடிக்கலாம். ஆனால் இரவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு குடிக்க வேண்டும். பானம் அருந்திய சில மணி நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் வரும்.
K.Sakthipriya
Krishi Jagran