நோயெதிர்ப்புச் சக்தி
பருவகால மாற்றத்தின் பொழுது தடிமனும் காய்ச்சலும் வந்துவிடுகின்றது. காலநிலை மாறும் போதெல்லாம், தலையிடி, தடிமன், காய்ச்சல் வந்துகொண்டிருந்தால் உங்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி போதியதாக இல்லை என்பதை அறிந்துகொள்ளவேண்டும். உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு பல வழிகள் உண்டு.
உங்கள் உடலை தற்காத்துக்கொள்ளும் விலைமதிப்பற்ற சொத்து - 'நோயெதிர்ப்புச்சக்தி'. இந்த நோயெதிர்ப்புச்சக்திக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உணவும் வாழ்க்கை முறையும் முதலிடத்தைப் பெறுகின்றது. அடுத்து மனவழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மனதை ஆறுதல்படுத்திக் கொள்வதும் முக்கியமாகின்றன.
செய்யவேண்டியது என்ன?
- புகை பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதனை கைவிடவேண்டும். நல்ல நிறமான பழங்கள், காய்கறிகளை அதிகமாக உண்ண ஆரம்பியுங்கள்.
- சரியான நேரத்தில் உண்பதோடு, ஆரோக்கியமான உடல் எடையையும் பேணி வாருங்கள். போதுமான நித்திரை, முறையான உடற்பயிற்சி என்பன உடலுக்கு மிகவும் அவசியம்.
- மனதுக்கு ஆறுதலாகவும் மனவழுத்தங்களை குறைத்தும் பழகிவருவது தேவையானது.
- உயர்ந்த அளவில் நார்ச்சத்தையும் குறைவான கொழுப்பையும் கொண்ட உணவுகளை உண்டுவருவதும் முக்கியம்.
- முறையான உணவுதான் சிறப்பான மருந்து என்பார்கள். சரியான உணவுப்பழக்கத்திற்குத்தான் முதலிடம் வழங்கப்படுகின்றது.
- ஆரோக்கியத்தைத் தராத உணவுகளை உண்டுவிட்டு சில விட்டமின் 'சி' மாத்திரைகளை விழுங்கிவிட்டால் ஆரோக்கியம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கக் கூடாது.
- தினமும் சத்தான உணவை முறையாக எடுப்பதன் மூலம் உடலின் நோயெதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்தி நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடும்.
அதிக தண்ணீர் அருந்துதல்:
நாளொன்றுக்கு 6 முதல் 8 குவளை தண்ணீரை அருந்துவதன் மூலம் உடல் முதலாவது பாதுகாப்பு அரணை இட்டுக்கொள்ளும்.