வெயில்
இனி மழைக்காலம் என நாம் வானம் பார்த்துக்கொண்டு இருந்தாலும், நம் ஊர்களில் என்னவோ பெரும்பாலான நாட்களும் ஏறக்குறைய கடும் வெயில்தான். இந்த கடும் வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
அதிகமாக தண்ணீர் குடியுங்கள்
உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர் என இணைந்து, நமது உடலின் உஷ்ண நிலையை (Maintain a Normal Body Temperature) சீராக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளும் நண்பர்கள் மிகவும் முக்கியமாக 2 முதல் 4 டம்ளர்கள் மிதமான குளிர்ந்த நீரை ஒரு மணிக்கு ஒரு தடவையாவது குடித்துக்கொண்டே இருப்பது அவசியம்.
வெகு அதிகாலை நடை / ஓட்டப் பயிற்சிகள்
‘நடக்கிறேன், ஓடுகிறேன், உடற்பயிற்சி செய்கிறேன்’ என ஏறும் உச்சி வெயிலோடு போட்டி போடுவதை அறவே தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சி மட்டுமல்ல... வீட்டு வேலையாகட்டும், ஆபீஸ், தொழிற்சாலை என எங்கிருந்தாலும் வெயில் உக்கிரமாக இருக்கும்போது கடும் உழைப்பை தவிர்க்க வேண்டும். வேறு வழியே இல்லை என்கிற போது இடையிடையே தண்ணீர், பழரசங்கள், சர்க்கரை அதிகம் இல்லாத குளிர்பானங்களை குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நடைப்பயிற்சி, ஓட்டம், சிறிய, சிறிய உடற்பயிற்சிகளை வெகு அதிகாலையில் வெயிலின் உக்கிரம் இல்லாத நேரத்தில் செய்யவும்.வெள்ளை உடை... வெயிலின் நண்பன்வெயிலின் உக்கிரத்தில் இருந்து விடுபட, வெயில் உஷ்ணத்தை நண்பனாக ஆக்கிக்கொள்வதே புத்திசாலித்தனம். வெள்ளை உடைகள் அல்லது அது சார்ந்த மிதமான நிற உடைகளை உடுத்துவது நல்லது.
மெல்லிய / காட்டன் / கதர் உடைகளே உத்தமம்
‘நான்தான் உடைகளை உலகுக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறேன்’ என அடுக்கடுக்காக ஒரு உடைக்கு மேலே, அதன் மேலே தோல் ஜாக்கெட் / ஜெர்க்கின் என பலதையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். காற்றுகூட புக முடியாத உடலை ஒட்டிய (Night Apparels) உடைகளை அணிவதையும் இந்நாட்களில் தவிர்த்து மெல்லிய காட்டன் அல்லது கதர் அணிவதால் உடலில் உஷ்ணம் கூடாமல் குளிர்ந்த (Cool Body) உடலின் உன்னதத்தை பெறுவீர்கள். உச்சி வெயிலை அறவே தவிர்த்து விடவும் காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையிலான உச்சி வெயிலில் கடுமையான உழைப்பைத் தவிர்த்து, அந்த நேரத்தில் கூடுதல் தண்ணீர் அருந்துவதோடு, குளுமையான நிழல் பகுதிகளில் சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.
சுட்டெரிக்கும் வெயிலுக்கான வெளிப்பாதுகாப்புகள்
வெயிலின் கொடுமையினால் நம் உள் உடல் மட்டுமல்ல... நமது தலைமுடி, கண்கள், சருமம் என அனைத்தையுமே உஷ்ணம் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் செல்லும். அதனால், உடலை குளுமையாக வைத்துக்கொள்ள, உடலின் வெளிப்பகுதிகளை பாதுகாக்க பெரிய தொப்பிகளை தலையில் அணிந்துகொள்ள வேண்டும். டாக்டர்களின் அறிவுரையோடு கண்களுக்கு சன்கிளாஸ், முகம் மற்றும் சருமத்துக்கு சன் ஸ்கிரீன் உபயோகப்படுத்தி குளுமைப்படுத்தலாம்.
வெயிலில் காருக்குள் குடும்பத்தை விட வேண்டாம்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காரில் குடும்பத்தோடு செல்லும் நண்பர்கள் கவனத்துக்கு... பொருட்கள், தேவையான சாமான்கள் வாங்கச் செல்லும்போது, ‘வெயிலில் அனைவரும் வெளியே செல்ல வேண்டாம்’ என எண்ணி குழந்தைகள், பெரியவர்களை காருக்குள்ளே இருக்கச் செய்வதால், பல சோகங்கள் நடந்துள்ளன. வெயிலில் காரை நிறுத்தும்போது காருக்குள் உஷ்ணம் அதிகரித்துக்கொண்டே போகும். அதை குழந்தைகளாலும், வயதான பெரியவர்களாலும் அறவே தாங்க முடியாது. காரில் செல்லும் அனைவருமே வெளியே சென்று குளுமையாக இருக்கலாம்.
உஷ்ணத்தோடு ஒத்துப்போங்கள்
நமது உடலின் தட்பவெப்பநிலை சீராக இல்லாமல், திடீர் என மாறிக்கொண்டே இருப்பது, உடலை வெகுவாக பாதிக்கச் செய்கிறது. இதன் காரணமாக நாமே பல நோய்களை நமக்கு உண்டாக்கிக் கொள்கிறோம். அதிக நேரம் வெயிலில் அலைந்துவிட்டு திடுதிப்பென ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறைக்குள்ளோ, காருக்குள்ளோ, திரை அரங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலோ நுழையக் கூடாது. உடல் உஷ்ணம் சற்று அடங்கியவுடன் ஏ.சி. அறைக்குள் செல்லவும். ஏ.சி. அறையில் இருந்து வெளியேறும்போதும் தடாலென முழு வெயிலும் தாக்கும்படி உடலை வருத்தக்கூடாது. மழை, வெயில், குளிர் என எந்த கால நிலையாக இருப்பினும், திடீர் திடீர் என அடிக்கடி உடலின் வெப்ப நிலை உயர்ந்து, தாழ்வது மிகவும் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும்.
அதிகமாக காபி/டீ/மது அருந்துவதைத் தவிர்க்கவும்
கடுமையான வெயிலின்போது தேவைக்கு அதிகமாக காபி, டீ, உடலுக்கு வேண்டாத குளிர்பானங்கள், மது போன்றவை மென்மேலும் தாகத்தை தூண்டு பவையாகவே உள்ளன. உடலின் உஷ்ணம் அதிகமடைந்து அதிக தாகமடைந்து, வெப்பம் தாள முடியாமல் துடித்துப் போவீர்கள். துன்பப்படும் நிலையில் டாக்டரிடம் செல்வது அவசியம் ரத்தக்கொதிப்பு, இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மேலும் பல உடல் உபாதைகளுக்கு எடுக்கப்படும் சில மருந்து, மாத்திரைகள் ரத்த ஓட்டத்தை குறைத்து, உடலின் சூட்டை கூட்டி, உடல் குளுமை அடைவதை தடை செய்ய பல முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த நேரங்களில் உடல் உஷ்ணம் கூடி, தலைசுற்றல், வாந்தி, பேதி என ஏற்படும் உடல் துன்பத்தின் ஆரம்பத்திலேயே டாக்டரிடம் செல்வது மிகவும் அவசியம்.