கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை, கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கும் கேரட், செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. இதனை தினமும் உட்கொள்ளுவதன் மூலம், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் எளிதில் அண்டாது.
கேரட்டின் மகத்துவம்
கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டினை பச்சையாக வெண்ணெயுடன் உண்பதன் மூலம், அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
பெண்களின் மார்பக புற்றுநோயை முற்றாமல் காக்கும் கேரட்
அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு, கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்து தெரிவித்துள்ளார்கள். ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் மட்டுமே இந்த காய்களில் உள்ள சத்துக்களால் அழிக்கப்படுமே தவிர, நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்று பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரட்டை உண்பதால் கிடைக்கும் பலன்கள்
- தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
- கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
- பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.
- வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் கேரட் செயல்படும்.
- கேரட் உண்பதால் நமது உடம்பில் இன்சுலின் அதிகம் சுரக்கிறது.
- கேரட்டில் நார்ச்சத்துக்கள் உள்ளதன் நிலையில், அது தேவையில்லாத கொழுப்புச்சத்தை குறைக்க உதவுகிறது.
- கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது.
- வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். விட்டமின் ஏ இதற்கு காரணமாகிறது.
கேரட்டின் மருத்துவ பயன்கள்
- கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களுக்கு பலம் கொடுப்பதோடு, விழித்திரைக்கு பலம் சேர்க்கும், கண்பார்வை நன்றாக இருக்கும்.
- தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும், வேர்குரு மறையும்.
- ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.
- கேரட் துருவலுடன் உப்பு, அரை ஸ்பூன் தனியா பொடி, மல்லி, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர வயிற்றுப்புண் சரியாகும், வயிற்று வலி குணமாகும்.
- கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. ஈறுகள் கெடாமல் இருக்கும், வாய் புண்கள் சரியாகும்.
- கேரட்டை பசையாக அரைத்து, மஞ்சள் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்துவர புண்கள் ஆறும், நரம்பு மண்டலங்கள் பலம் பெறும், ரத்த அணுக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது, ஈரலுக்கு பலம் கொடுக்கிறது.
- அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
M.Nivetha
nnivi316@gmail.com