கொரோனா வைரஸ் பாதித்து மூன்று மாதங்களுக்குப் பின், அதிக அளவில் தலைமுடி உதிர்வது பொதுவான பிரச்னையாக உள்ளது. இத்துடன், வழக்கத்தை விடவும் தலைமுடி மெலிசாவது, வறட்சி ஆகிய இரண்டு பிரச்னைகளும் உள்ளன.
வைரஸ் தொற்று பாதித்த நாள் துவங்கி, குணமாகும் காலம் வரையிலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) மிகவும் குறைந்து இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று தவிர, கர்ப்ப காலம், ஏதாவது தீவிர உடல் பாதிப்புகள், அறுவை சிகிச்சைக்கு பின், மலேரியா, டைபாய்டு, காச நோய், ஊட்டச்சத்து குறைபாடு, சில வகை மருந்துகள், தைராய்டு கோளாறு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரும் போதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தலை முடி உதிரும். என்ன விதமான பிரச்னையால் மன அழுத்தம் ஏற்பட்டாலும் தலைமுடி உதிரும். கொரோனா தொற்றின் போது மன அழுத்தம் தவிர்க்க முடியாதது.
பாலிக்கில்ஸ்
தலைமுடி வளர்வது, ஓய்வு, உதிர்வது இந்த மூன்று நிலைகளும் பொதுவாக, சீரான சுழற்சியில் நடக்கும். 'பாலிக்கில்ஸ்' எனப்படும் தலைமுடி வேர்க்கால்களில் 90 சதவீதம் வளரும் நிலையிலும் 5 -10 சதவீதம் ஓய்விலும் இருக்கும். தினமும் 0.4 மி. மீ., அளவிற்கு தலை முடி வளரும். இதில் 85 சதவீதம் 'அனாகேன்' எனப்படும் வளரும் நிலையில் இருக்கும்; மீதி உள்ள ஒன்றிரண்டு சதவீத தலைமுடி, உதிரும் நிலையில் இருக்கும்.
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு, டெலோஜம் எப்புலுவியம் எனப்படும் தற்காலிக தீவிர தலைமுடி உதிரும் பிரச்னை அதிக அளவில் பாதிக்கிறது. தொடர்ந்து சாப்பிடும் ஸ்டிராய்டு மருந்துகள், குறிப்பிட்ட ஊட்டச்சத்து உணவுகள், தொற்றால் ஏற்படும் மன அழுத்தம், குணமான பின், மீண்டும் வந்து விடுமோ என்ற பயம் போன்றவை தலைமுடி உதிர்வுக்கு காரணிகள்.
மன அழுத்தம்
பிரச்னை ஏற்பட்ட மூன்று - ஆறு மாதங்களுக்குப் பின், லேசான முடி வளர்ச்சி இருக்கும்; கொரோனாவிற்கு முன் இருந்த நிலையில் முடி வளர்ச்சி ஏற்பட 12 -18 மாதங்கள் ஆகின்றன. தலையின் முன் பக்கத்தில், தாராளமாக முடி வளர துவங்குவது, பிரச்னை சரியானதற்கான அறிகுறி எனப் புரிந்து கொள்ளலாம்.
தலை முடி உதிர துவங்கியதும், 'இவ்வளவு முடி உதிர்கிறதே' என்ற மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இது பிரச்னையை மேலும் தீவிரமாக்குமே தவிர, குறையாது. தலைமுடி உதிர்வது குறித்து கவலைப்படுவதை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
வைரஸ் தொற்று குணமான பின், மூன்று வாரங்கள் கழித்து தினமும் சீரான உடற்பயிற்சி செய்வது, புரத சத்து நிறைந்த சமச்சீரான உணவை சாப்பிடுவது, முடி வளர உதவும். செயற்கையான, அதிக வேதிப் பொருட்கள் கலந்த எண்ணெய், ஷாம்பூ, கிரீம்களை தலைமுடியில் தடவுவதை தவிர்ப்பது நல்லது. மிக அதிகமாக முடி உதிர்வது, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முடி உதிர்வது, அரிப்பு, எரிச்சல், சிவப்பு நிற திட்டுக்கள் போன்ற பிரச்னைகள் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம்.
டாக்டர் வி.லட்சுமி பிரியா,
தோல் சிறப்பு மருத்துவர்,
சென்னை.
73977 76331
மேலும் படிக்க
குழந்தைகளுக்கு சளித்தொல்லை: பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்!
இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளின் சிகரம் வில்வம்!