உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்படும் கம்பு உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடும் வறட்சியிலும், அதிக தட்ப வெட்ப சூழலிலும் விளையும் கம்பு, 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிகளவு ப்ரோட்டீன் சத்து நிறைந்த சிறுதானியம்
சிறுதானிய வகைகளுள் ஒன்றான கம்பில் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. அதே போல், 42 கிராம் கால்சியம், 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து, 0.38 மில்லி கிராம் பி 11 வைட்டமின் சத்து, 0.21 மில்லி கிராம் ரைபோபிளேவின், 2.8 மில்லி கிராம் நயாசின் ஆகிய சத்துக்கள் நிறம்பியுள்ளது. மேலும் வேறெதிலும் இல்லாத 5 சதவிகித எண்ணெய் உள்ளது. இதில், உடலுக்கு மிகவும் உகந்த 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது.
ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட கம்பு
சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இடம் பெற்றுள்ள கம்பு, ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அரிசியை விட எட்டு மடங்கு இரும்பு சத்து நிறைந்த இந்த கம்பினை வளரும் குழந்தைகளுக்கும், மாத விடாய் துவங்கிய பெண்களுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கொடுப்பது அவசியம். கம்பு என்றாலே கஞ்சி தான் நமக்கு நினைவிற்கு வரும். ஆனால் கம்பினை சாதமாக, அவலாக, பொரியாக கூட எடுத்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் கம்பு
உடல் எடையினை குறைக்க நினைப்போரது டயட்டில் தானியங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அதுமட்டுமின்றி, தானிய உணவுகளை சாப்பிட்டால், எளிதில் செரிமானமடைவதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. அதன் படி, கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடல் எடையினை குறைக்கலாம்.
கம்பின் மருத்துவ குணங்கள்
- கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
- கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரண கோளாறுகள் நீங்கி, நன்கு பசி எடுக்கும். மேலும் அடிக்கடி கம்பங்கஞ்சி குடித்து வர, உடல் வலு அதிகரிக்கும்.
- கம்பு உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இளநரையை போக்குவதோடு, தாதுவையும் விருத்தி அடைய செய்கிறது.
- கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.
- கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது.
- மலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக உருவெடுத்து வரும் இந்த காலக்கட்டத்தில், நார்சத்து நிறைந்த கம்பினை தினமும் உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் முற்றிலும் குணமாக உதவுகிறது.
- கம்பு நல்லது என்பதால் அளவுக்கு அதிகமாக அக்கஞ்சியினை குடித்தால், சில நேரங்களில் அதன் குளிர்ச்சி தன்மை காரணமாக சிலருக்கு இரும்பல், இரைப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். அதனால் கம்பினை அளவாக சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
M.Nivetha
nnivi316@gmail.com