சரும நலனுக்கு சவால் விடும் பல்வேறு விஷயங்களில் பருவநிலை மாற்றமும் ஒன்று. அந்த வகையில் வெயில், மழை, காற்று காலங்களைப் போலவே பனிக் காலத்திலும் சருமத்தைக் காக்க போதுமான அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். வடகிழக்குப் பருவ மழை காலம் முடிந்து டிசம்பரிலும், அடுத்து வரும் ஜனவரியிலும் பனி நம்மை ஆட்கொள்ளப் போகிறது.
பனி கால பருவ மாற்றத்தை எப்படி எதிர்கொள்வது?
சருமம் மிருதுவாகவும், வெடிப்பு ஏற்படாமலும் இருப்பதற்கு சருமத்தில் 10-15% நீர்ச்சத்து இருக்க வேண்டும். உலர்ந்த குளிர்காற்று இருக்கும் பருவ காலத்திலும், குளிர்சாதனம் உள்ள அறையிலேயே வேலை பார்ப்பவர்களுக்கும் சருமம் மிகவும் உலர்ந்து போகும் அபாயம் உள்ளது. இப்படி சருமம் உலர்ந்துபோனால், வியர்வை சுரப்பியிலிருந்தும் எண்ணெய் சுரப்பியிலிருந்தும் உருவாகும் நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய Hydrolipid Film காய்ந்துவிடும். இந்த Hydrolipid Film-தான் நம் தோலை ‘அரண்’ போல் பாதுகாப்பதற்கு மிக முக்கியம்.
சருமம் உலராமல் எப்படி பார்த்துக் கொள்வது?
- மிக சூடான நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
குளிப்பதற்கு முன்பு உடலில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தடவி விட்டு, பின்பு குளிக்கலாம். - நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் சருமத்தை மிகவும் வறண்டுவிடச் செய்யக் கூடாது. அதனால் Syndet சோப்புகள் அல்லது Liquid சோப்புகள் உபயோகிக்கலாம். நார் போன்ற பொருட்களைக் கொண்டு சருமத்தைத் தேய்ப்பதை தவிர்க்கவும்.
- குளித்து முடித்தவுடன் நம் சருமத்தின் துவாரங்கள் திறந்து இருப்பதால் மாய்சரைசர்ஸ் க்ரீம்கள் கொஞ்சம் தடவினால்கூட ஈரப்பதம் நன்கு கிடைக்கும். ஆகையால், குளித்து முடித்து துண்டால் துடைத்தவுடன் கொஞ்சம் ஈரம் சருமத்தில் உள்ளபோதே மாய்சரைசர்ஸ் க்ரீம்களை தடவ வேண்டும்.
- நம் ஊரில் குளிர்காலத்தில்தான் பருத்தி அல்லாத உடையை அணிவதற்கு உகந்த காலம் என்பதால், டைட்ஸ் போன்ற உடைகளையும், உல்லன் ஆடைகளையும் அணியலாம். ஆனால், உங்களுக்கு சருமத்தில் எந்த ஒரு பிரச்னையும் இல்லாதிருந்தால் மட்டுமே அவற்றை அணிவது நலம். சரும நோய்கள் ஏதேனும் இருப்பின் இவ்வகை ஆடைகளைத் தவிர்த்து விடுங்கள்.