கொரோனா பெருந்தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்கன்றுகளை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது.
இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவேரி நதிக்குப் புத்துயிரூட்டுவதற்காகவும், அதைச் சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
2.1 கோடி மரக்கன்றுகள்
காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் மாவட்டந்தோறும் கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து மரங்கள் நடுவதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். பின்னர், மரம் நட விருப்பம் தெரிவிக்கும் விவசாயிகளின் நிலங்களின் மண் மற்றும் தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மரங்களைப் பரிந்துரை செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களில் சிறப்புக் களப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் பயனாக, காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் (2020, 2021) தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 2.1 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். அத்துடன், சுமார் 1,25,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர்.
இயற்கை முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்காக 32 நர்சரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, விவசாயிகளிடம் இருந்தே மரக்கன்றுகளை நேரடியாகக் கொள்முதல் செய்யும் விதமாக அவர்களுக்கு நர்சரி தொடங்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. காவேரி கூக்குரல் உட்பட ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்கள் மூலமாக இதுவரை ஒட்டுமொத்தமாக 6.2 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...