சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொளுத்தும் வெயிலால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களில் சருகு அழுகல் நோய் தாக்கியுள்ளது. இதனை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தேவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சென்றாயனூர், காவேரிப்பட்டி, வெள்ளாளபாளையம், புல்லா கவுண்டம்பட்டி, சுண்ணாம்பு கரட்டூர், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, தண்ணீர் தாசனூர், பொன்னம் பாளையம், கல்லம்பாளையம், சின்னாம்பாளையம் கோனேரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நேந்திரம், கதளி, செவ்வாழை உள்ளிட்ட வாழை ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வாழை இலைகள் கருகி உள்ளன. வாழையில் சருகு அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் வாழை இலை சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சேலம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சத்யா, சங்ககிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அனுஷா, தோட்டக்கலை உதவி அலுவலர் விஜயவர்மன் உள்ளிட்ட அதிகாரிகள், தேவூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். சில வாழை மரங்களில் புது விதமான நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இந்த வாழை இலையில் வைரஸ்கள் காற்றினால் பரவியதா, வெயிலின் தாக்கமா? என, பரிசோதனைக்காக வாழை மரங்களை வெட்டி எடுத்தும், வாழை மரத்தின் தண்டு, இலை, வேர் கிழங்கு மண் ஆகியவற்றினை சேலம் தோட்டக்கலை அலுவலகத்துக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும், வாழை மரம் வளர்ப்பு, பராமரிப்பு குறித்தும் அறிவுரை வழங்கினர்.
தடுப்பு முறைகள்
பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட்டு, ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது மாங்கோ செப் 2 கிராம் அல்லது புரோப்பிகோனசோல் ஒரு மில்லி மற்றும் ஒட்டும் திரவங்களான சான்டோவிட் அல்லது டீப்பால் போன்றவற்றை கலந்து தெளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
தென்னை மரங்களில் வெள்ளை ஈ பாதிப்பு : வேளாண் துறையினர் ஆய்வு!