பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நன்கு அறியப்பட்ட ஓமம் இந்திய மருத்துவத்தில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இது ஏபியேசி குடும்பத்தை சேர்ந்த விதை நறுமணப்பயிராகும். சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ மருந்துகளில் அதிக இடம் பெற்றுள்ள ஓமத்தில் பல மருத்துவ பண்புகள் உள்ளன.
நிலம் தயார் செய்தல்: நிலம் தயார் செய்யும் போது எக்டருக்கு 10டன் தொழுவுரம் இட்டு மண்ணில் நன்கு கலக்க வேண்டும். இரண்டு உழவுக்கு இடையில் ஒரு நாள் இடைவெளி விட்டு உளவு செய்ய வேண்டும். உழவு செய்த பின்னர் நிலத்தை சமப்படுத்தி, சிறுசிறு பாத்திகளாகப் பிரித்து பாசனம் செய்வதற்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். விதையின் முளைப்பு திறனை மேம்படுத்த மண்ணில் போதிய அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும்.
பருவம்: ஓமம் வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலங்களில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் காரிப் மற்றும் ரபி பருவங்களில் ஓமம் பயிரிடப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டில் ரபி பருவமான ஆகஸ்டு மாதத்தில் பயிரிடப்படுகிறது. ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் விதை விதைக்கப்பட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
விதைப்பு முறை: பயிர்க்காலத்தில் பயிர் மேலான்மைப் பணிகளை கருத்தில் கொண்டு நேரடி விதைப்பு முறை பின்பற்றப்படுகிறது. பயிருக்கான இடைவெளி 20 -30செ.மீ இருக்க வேண்டும். விதைத்த பின்பு விதையின் முளைப்புதிறன் 60 -70 சதவீதம் இருக்கும். விதைக்கப்பட்ட விதைகள் முளைப்பதற்கு 10முதல் 12 நாட்கள் ஆகும். விதைகள் அளவில் சிறியதாக இருப்பதால் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். 1 -1.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.
உர மேலாண்மை: உழவிற்கு முன்பு நன்கு மக்கிய பண்ணைக்கழிவுகள், 10 டன் இட்டு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 40கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்துக்களை முறையே 66 கிலோ யூரியா, 250 சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிலோ மூரியேட் ஆப் பொட்டர்' மூலம் அளிக்க வேண்டும். கூடுதலாக 30 கிலோ தழைச்சத்தை (66 கிலோ யூரியா) இரண்டு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியை விதை விதைத்து 45 நாள் கழித்தும் இரண்டாவது பகுதியை பூக்கும் பருவத்திலும் அளிக்கவேண்டும்.
நீர் மேலாண்மை : பயிர்காலம் முழுவதும் நான்கு முதல் ஐந்து பாசனங்கள் அளிக்க வேண்டும். விதைப்புக்கு பின்னர் மண்ணின் ஈரத்தன்மை குறைவாக இருப்பின் மிதமான பாசனம் நாட்கள் இடைவெளியில் அளிக்கலாம். காலநிலை மற்றும் மண்ணின் தன்மையை பொறுத்து தொடர்ச்சியாக 15 - 25 நாட்கள் இடைவெளியில் பாசனம் அளிக்க வேண்டும்.
அறுவடை மற்றும் மகசூல்: 130 முதல் 180 நாட்களில் அறுவடைக்கு வரும். பொதுவாக பிப்ரவரி முதல் மே மாதங்களில் பயிர் அறுவடை செய்யப்படுகிறது. விதைகள் சாம்பல் நிறத்திற்கு மாறியவுடன் செடிகளை வேரோடு பிடிங்கி விடலாம் அல்லது கதிர் அரிவாள் கொண்டு அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட செடிகள் காயவைக்கப்பட்டு, கட்டுகளாக கயிரால் கட்டப்பட்டு பின்னர் குச்சியால் அடித்து விதைகளை செடிகளிலிருந்து பிரிக்க வேண்டும். இந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றினால் எக்டருக்கு 1.1 டன் வரை மகசூல் பெறலாம்.