பொதுவாக மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட்டை கோவையில் சாகுபடி செய்து ஈஷா விவசாய இயக்கத்தினர் சாதனை படைத்துள்ளனர்.
விவசாய சேவை (Agricultural Service)
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் கேரட்டை சமவெளியில் கூட விளைவிக்கமுடியும் என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார்கள் ஈஷா விவசாய இயக்கத்தினர். இயற்கை விவசாயத்தில் கோவையில் கேரட் விளைவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை நடத்துவதுடன் கோவை, ஈரோடு, திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூரில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறது. மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
ஊடுபயிராக (Intercropping)
அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள பண்ணையில் இந்த முறை வெண்டைக்கு இடையே கேரட்டை ஊடுப்பயிராக நடவு செய்யப்பட்டது.
அதிக எடை (Overweight)
110 நாட்களுக்குப் பிறகு எதிர்ப்பார்த்தை விட நல்ல பருமனாமாகவும் நீளமாகவும் கேரட் விளைந்து உள்ளது. பொதுவாக கடையில் வாங்கினால், 1 கிலோவிற்கு 12 முதல் 13 கேரட் நிற்கும். ஆனால், எவ்வித ரசாயனத்தையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விளைவித்ததன் காரணமாக, இவர்களுடைய 6 அல்லது 7 கேரட்களை எடைப்போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும் போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது.
பலபயிர் சாகுபடி (Multi-crop cultivation)
கேரட் மட்டுமின்றி, பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் ஒரே இடத்தில் வெண்டை சாகுபடியில் ஊடுபயிராக செய்திருக்கிறார்கள். இந்த முறை மழை அதிகமாக பெய்தும் லாபத்தில் எந்த குறையும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரசியையும் நாங்கள் கடந்த 3 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது. எங்கள் தோட்டத்திற்கு அருகில் ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள் எடுக்கும் விளைச்சலை விட இது அதிகம்.
விவசாயிகளுக்குப் பயிற்சி (Training for farmers)
இப்படி, நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியும் கொடுக்கிறோம். குறிப்பாக இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் விளைப்பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி மண் வளம் அதிகரிக்கிறது.
மானியம் தேவை (Grant required)
குறைந்தப்பட்சம் 3 சதவீதம் கரிம பொருட்கள் (Organic Content) இருந்தால் தான் அதை வளமான மண் என சொல்ல முடியும் என ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகிறது. ஆனால், நம் இந்தியாவில் அதன் அளவு 0.5-க்கும் கீழாக உள்ளது. இதே நிலை நீடித்தால், இந்த மண் முற்றிலும் வளம் இழந்து எவ்வித விவசாயமும் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்படுவோம்.
ஆகவே, மண் வளத்தை மீட்க மரம் வளர்ப்புடன் கூடிய இயற்கை விவசாயமே ஒரே தீர்வு. எனவே ரசாயன உரங்களுக்கு மானியம் அளிப்பது போல் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பிரத்யேக மானியங்கள் அளித்தால் அதிகப்படியான விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
இன்னுயிர் காப்போம் திட்டம்: விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சை!