சேலத்தில் உள்ள காய்கறி சந்தைகளில், வரத்துக் குறைந்திருப்பதால், ஒரு கிலோ கேரட் 100 ரூபாயை எட்டியிருக்கிறது. இந்த திடீர் விலைஉயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கடந்த மாதம் 40 ரூபாயாக இருந்த கேரட் தற்போது 100ரூபாயை எட்டியிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப் பேட்டை மற்றும் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தை உள்ளன. இதைப்போல் சேலம் வ.உ.சி. தினசரி சந்தை, திருமணிமுத்ததாறு கரையோர சந்தை, செவ்வாய்ப்பேட்டை சந்தை, ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர் உள்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள தினசரி சந்தைகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் மூட்டைகளில் வைத்து வாகனங்கள் மூலம் விற்பனைக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
வரத்து அதிகம்
அதேபோல் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் பெரிய அளவிலான கேரட் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் மற்றும் பெங்களூருவில் இருந்து கேரட் லோடு வரத்து அதிகமாக இருந்தது.இதனால் உழவர் சந்தை, தினசரி சந்தைகளில் தரத்திற்கு ஏற்ப கேரட் விலை ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கேரட் விலை 2 மடங்காக எகிறியுள்ளது.
அதாவது கிலோ ரூ.90 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40-க்கு என விற்ற கேரட் தற்போது ரூ.100-க்கு விற்பனையாகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வேறு வழியின்றி சமையலுக்கு குறைந்த அளவிலேயே கேரட்டை வாங்கிச் சென்றனர்.
மேலும் படிக்க...