தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து ஆண்டுத்தோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 2024 ஆம் வருடத்திற்கான 20 புதிய பயிர் ரகங்களை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெளியிட்டார்.
நடப்பாண்டு வேளாண் பயிர்கள் (10 எண்ணிக்கை) மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் (10 எண்ணிக்கை) என தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட 20 புதிய ரகங்களில் திராட்சை, பலா, வாழை போன்ற பயிர்களும் அடங்கும். அவற்றின் சிறப்பியல்பு விவரம் பின்வருமாறு-
திராட்சை ஜிஆர்எஸ் (எம்எச்) 1
- பெற்றோர்: பன்னீர் திராட்சை இரகத்திலிருந்து தேர்வு
- வயது: கவாத்து செய்ததிலிருந்து 120-130 நாட்களில் அறுவடை
சிறப்பியல்புகள்:
- பழ மகசூல்: 41 டன்/எக்டர்/ஆண்டு
- நடுத்தரமான பழக் கொத்துகள் (325-350 கிராம்)
- பெரிய அளவிலான பழங்கள்
- குளிர்காலத்தில் கவாத்து செய்யும் பொழுது அதிக இனிப்பு தன்மை (24-26° பிரிக்ஸ்)
- ஆந்த்ராக்னோஸ் மற்றும் துரு நோய்களை தாங்கி வளரக்கூடியது
- கோடை காலத்தில் குறைந்த அளவில் அடிச்சாம்பல் நோய் தாக்குதல்
- பழங்கள். சாப்பிடவும் பழச்சாறு மற்றும் ஒயின் தயாரிப்பதற்கும் ஏற்றது
பலா பிகேஎம் 2
- பெற்றோர்: முத்தாண்டிகுப்பம் உள்ளூர் இரகத்திலிருந்து தேர்வு
- வயது: பல்லாண்டு பயிர்
சிறப்பியல்புகள்:
- மகசூல் - 6 டன்/எக்டர்/ஆண்டு
- நடுத்தர அளவுள்ள பழங்கள் (46 கிலோ)
- அடர் நடவிற்கு ஏற்ற உயரம் குறைவான மரங்கள்
- இரு பருவத்திலும் (மார்ச்-ஜனவரி) (70%), (நவம்பர்-டிசம்பர்) (30%) மகசூல் தரவல்லது
- அதிக இனிப்புத் தன்மை (8° பிரிக்ஸ்)
- மாவுப் பூச்சி, காய் துளைப்பான், தண்டு துளைப்பான் மற்றும் பழ அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை உள்ளது
வாழை காவிரி காஞ்சன்:
- பெற்றோர்: நேந்திரன் x சிவி.ரோஸ்
- வயது: 305- 320 நாட்கள்
சிறப்பியல்புகள்:
- புரோ வைட்டமின் ஏ செறிவூட்டப்பட்ட இரகம்
- ரஸ்தாளி மற்றும் ஜி 9-ஐவிட 30 மற்றும் 40 மடங்கு வைட்டமின் ஏ சத்து மிகுந்தது (4 மி.கி/100 கி)
- தார் எடை 23 கிலோ (நேந்திரன் ஐவிட 20% அதிக மகசூல்)
- அதிக இனிப்புசத்து (6° பிரிக்ஸ்)
- வாடல் நோய்க்கு (எப்ஒசி 1 & டிஆர் 4) எதிர்ப்புத்திறன்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்ப வெப்ப பகுதிகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் மூலம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆண்டு தோறும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக புதிய ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?
நெல் மற்றும் சோள பயிரில் TNAU வெளியிட்ட புதிய இரகங்களின் சிறப்பம்சம் என்ன?