Horticulture

Friday, 28 September 2018 01:24 PM

கொத்தவரை சாகுபடி

கொத்தவரை என்பது கொத்தாக காய்கள் உள்ள ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். இது சுமார் 2 – 3 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

காய்கறிப்பயிராகவும், தீவனப் பயிராகவும், பசுந்தாளுரப் பயிராகவும் பயன்படுவதோடு, இத்தாவரத்தின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் என்னும் பாக்டீரியாவானது காற்றில் உள்ள நைட்ரஜனைக் கவர்ந்து மண்ணை வளப்படுத்துகின்றது.

பயறு வகைப் பயிர் என்பதால் புரதச் சத்து மிகுந்துள்ளது. கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் மிகக் குறைவாகவே உள்ளது. 

இரகங்கள்: பூசா மவுசாமி, பூசா நவுபகார், பூசா சதபாகர் மற்றும் கோமா மஞ்சரி.

மண்: கொத்தவரைச் செடியைப் பயிர்செய்ய தண்ணீர் தேங்காத மணல் கலந்த தோட்டமண் ஏற்றது. உவர் நீர், உவர் மண்ணிலும் வளர்வது இதனுடைய சிறப்பாகும்.

விதைப்பு மற்றும் பருவம்

ஜூன் - ஜூலை, அக்டோபர் - நவம்பர் மாதம் விதைப்புக்கு ஏற்றது. விதைகளை பார்களின் பக்கவாட்டில் 15 செ. மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

விதையளவு: ஒரு எக்டருக்கு 10 கிலோ விதை

விதை நேர்த்தி: ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர்க் கலவையைக் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். விதைக்கும் முன்னர் 15-30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்பட செய்தல் வேண்டும். பின் பார் சால்களை 45 செ. மீ இடைவெளியில் அமைத்தல் வேண்டும்.

ஊட்டச்சத்து நிர்வாகம்

கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து

50 கிலோ, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து அடியுரமாக இடவேண்டும். நடவு செய்த 30வது நாளில் ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இலை தத்துப்பூச்சி

மீத்தைல் டெமட்டான் 25 இசி 1 மில்லி (அ) டைமெத்தோயேட் 30 இசி 1 மிலி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

காய்ப்புழு

கார்பரைல் 2 கிராம் (அ) எண்டோசல்பான் 2 மிலி என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய்

இலைப்புள்ளி

மேங்கோசிப் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

சாம்பல் நோய்

15 நாட்களுக்கொருமுறை நனையும் கந்தகத் தூள் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்த தெளிக்க வேண்டும்.

 

மகசூல்

விதைத்த 90வது நாளில் 5-7 டன் மகசூல் கிடைக்கும்.

 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)