திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் மானிய விலையில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்பட உள்ளதால், அதனை வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நலத்திட்டங்கள் (Welfare schemes)
விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு,விதைகள் தேசிய உணவு அபிவிருத்தித் திட்டம், தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம்,விதை கிராமத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில், விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் மூலம் விதைப் பண்ணைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு முறையான ஆய்வுக்குப் பிறகு சான்று பெற்ற விதைகள், விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
மானிய விலையில் (At subsidized prices)
அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டத் தரமான விதைகள், உடுமலை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எனவே இவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
விதைகள் கையிருப்பு (Seed stock)
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், உடுமலை வேளாண்மை அலுவலகத்தில் கோ 51 ரக நெல் விதைகள் 18 டன் அளவிலும், ஏடிடி 45 ரக விதைகள் 2900 கிலோ அளவிலும் கையிருப்பு உள்ளது.
இதுதவிர வம்பன் 8 ரக உளுந்து விதைகள் 2 டன் அளவிலும், கொண்டைக்கடலை விதைகள் 2,630 கிலோ அளவிலும், நிலக்கடலை விதைகள் 1080 கிலோ அளவிலும் உள்ளது. சோளம் விதைகள் 400 கிலோ அளவிலும் மற்றும் கம்பு விதைகள் 100 கிலோ அளவிலும் இருப்பு உள்ளது.
இந்த விதைகள் தேசிய உணவு அபிவிருத்தித் திட்டம், தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம், விதை கிராமத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ளது.
தேவைப்படும் விவசாயிகள் உடுமலை வட்டார வேளாண் துறையினரைத் தொடர்பு கொள்ளலாம்.
நுண்ணூட்டங்கள் (Micronutrients)
இதுதவிர, சிறுதானிய நுண்ணூட்டங்கள் 2300 கிலோ அளவிலும், தென்னை நுண்ணூட்டம் 3500 கிலோ, பயறு வகை நுண்ணூட்டம் 800 கிலோ, நெல் நுண்ணூட்டம் 1,750 கிலோ, கரும்பு நுண்ணூட்டம் 200 கிலோ என்ற அளவுகளில் இருப்பு உள்ளது.
இயற்கை மருந்துகள் (Natural Remedies)
மேலும் நெல் அசோஸ்பைரில்லம் 200 லிட்டர், இதர வகை 120 லிட்டர், பயிர் ரைசோபியம் 50 லிட்டர், பாஸ்போபாக்டீரியா 230 லிட்டர் இருப்பு உள்ளது.
இவற்றை விவசாயிகள் வாங்கிப் பயனடையலாம்.
இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும் படிக்க...
2 நாட்களில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு- காவேரி கூக்குரல் இயக்கம் ஏற்பாடு!
வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!