பூமி உயிர்ப்புடன் இருப்பது மரங்களால் மட்டுமே,மனிதர்களால் அல்ல... இந்த உண்மையினை அறிந்து கொண்டால் போதும்.. நம் முன்னோர்கள் விட்டு சென்ற இந்த அழகான, ஆரோக்கியமான பூமியை என்ன செய்து கொண்டு இருக்கிறோம்.. இதை உணர்ந்து கொண்டால் போதும், அடுத்த தலை முறையினருக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து வேண்டும்.
மண்ணின் சிறப்பு என்னவெனில், அதன் மேல் விழும் அனைத்தையும் மக்க வைக்கும், மறைந்த பின் மனிதர்களை கூட.. ஆனால் அதன் மேல் விழும் எந்த விதையும் மக்க வைக்காமல் மாறாக உயிர் பெற செய்யும்... நான் சொல்வது சரிதானே
வீரியமிக்க விதைப்பந்தை உருவாக்குவது எப்படி?
- விதை பந்து தயாரிக்கும் போது தண்ணீரோடு, சிறிது கோமியம் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- பசுச்சாணத்தோடு மண்புழு உரம் சேர்த்தால் வீரியம் அதிகரிக்கும்.
- கறையான் மற்றும் புற்று மண்ணைப் பயன்படுத்தும் போது விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
- விதை பந்து கலவையில் சிறிது சாம்பலைச் சேர்த்து தயாரிக்கலாம், அல்லது விதைப்பந்துகள் மீது ஈர நிலையில் இருக்கும்போது சாம்பலைத் தூவிவிட்டால் பூச்சிகள் தாக்காது.
- ஈரப்பதம் உள்ள விதைகளை அப்படியே விதைப்பந்துகளில் பயன்படுத்தலாம். கடினமான தோல் கொண்ட விதைகளாய் இருப்பின் வெதுவெதுப்பான நீரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து எடுத்து தயாரிக்கலாம். இதனால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
விதை பந்து தயாரிக்கும் முறை
- தோட்டத்து மேல் மண் (செம்மண் / களிமண்)
- விலங்கு கழிவு (மக்கிய ஆடு அல்லது மாட்டு எரு / பசுஞ்சாணம் / மண்புழு உரம்)
- நாட்டு மர விதைகள்
- மண்:விலங்கு கழிவு: விதை = 5 : 3 : 1 என்ற அளவில் எடுத்து விதையை உள்ளே வைத்து மூட வேண்டும்.
- மேலே குறிப்பிட்டுள்ள விகிதத்தில் சிறிதளவு நீரூற்றி பிசைந்து நடுவே, சேகரித்த விதைகளை வைத்து நிழலில் உலர்த்தி, பின் வெயிலில் ஒருநாள் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் விதை பந்துகளில் வெடிப்பு எதுவும் ஏற்படாமல் நன்கு காய்ந்து விடும்.
- நாம் உருவாக்கிய இந்த விதை பந்து பிற பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். குறிப்பாக பறவைகள், எறும்புகள், எலி போன்றவைகளிடமிருந்து ஒரு ஆண்டு வரை பாதுகாக்கும்.
- விதை பந்தில் கலந்துள்ள சாணமானது, நுண்ணுயிர்களை உருவாக்கி, செடியின் வேர், மண்ணில் எளிதில் சென்று தன்னை மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும்.
விதைக்க ஏற்ற மரங்கள்
- வேம்பு
- புங்கன்
- கருவேல்
- வெள்வேல்
- சந்தனம்
- சீத்தா
- வேங்கை
- மகிழம்
- வாகை
- கொய்யா
- புளி
- ஆலமரம்
- அரசு
- புன்னை
- வில்வம்
- வள்ளி
- கருங்காலி
- நாகலிங்கம்
இவ்வகை நாட்டு மரங்கள் விதை பந்து தயாரிக்க உகந்தவை.
விதை பந்துகளை தூக்கி எறியும் போது கவனிக்க வேண்டியவை
- தரிசு மற்றும் கட்டாந்தரைகளில் வீச கூடாது.
- விவசாய நிலங்களில் வீசப்படும் போது விதைப்பந்துகள் வளர்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
- பருவநிலையை கருத்தில் கொண்டு விதை பந்துகளை வீசும் வேண்டும்.
- சூழலுக்கேற்ற மரங்கள், விதைப்புக்கான இடம் ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே வீசும் விதைப்பந்துகள் சரியாக முளைக்கும்.
- பொதுவாக ஈரப்பதம் உள்ள மண்ணில்தான் விதைகள் முளைக்கும் என்பது நாம் அறிந்ததே,எனினும் தூக்கி எறியப்படும் விதைகளுக்கு தண்ணீர் விடுவது இயலாதது. அதனால், தமிழகத்தின் மழை மாதங்களான செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைகளை வீசினால் நல்ல பலன் கிடைக்கும்.
Anitha Jegadeesan
Krishi Jagran