தாவரங்கள் தங்களுது சிறந்த வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் தேவையான நீரை மழையின் மூலமாக பெற்றுக்கொள்கிறது. ஆனால் தாவரங்களின் சிறந்த வளர்ச்சிக்கு மழை நீரானது பொதுமானதல்ல. பயிர்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் போது செயற்கை முறையில் பாய்ச்ச வேண்டும். இந்த செயற்கை முறை நீர் பாய்ச்சலை "நீர்பாசனம்" என்பர்.
தமிழகத்தின் நீர் ஆதாரங்கள்
பயிர்களுக்கு தேவையான பாசன நீரானது ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் போன்றவற்றில் இருந்து பெறப்படுவதால் இவற்றை நீர்ப்பாசன ஆதாரம் எனலாம். தமிழ்நாட்டில் உள்ள மொத்த பாசன பரப்பு சுமார் 29 லட்சம் ஏக்கர் ஆகும்.
பயிர் வளர்ச்சிக்கு நீரின் பங்களிப்பு
* தண்ணீர் ஓர் மூலக்கூறாக பயிர்களில் திசுவுறை உயிர்ப்பொருளாகிறது.
* தண்ணீரால் நுண்ணூட்டச்சத்துக்கள் கரைவதன் மூலம் பயிர்கள் அந்நுண்ணூட்டசத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது.
* தண்ணீர் நுண்ணூட்டச்சத்துக்களின் கடத்தியாக செயல்படுகிறது.
* ஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இவ்வொளிச்சேர்க்கையினால் கிடைக்கும் மூலப்பொருளை தாவரத்தின் வெவ்வேறு பகுதிக்கு தண்ணீரால் கடத்தி செல்லப்படுகிறது.
* தாவரத்தின் மொத்த எடையில் தண்ணீர் 70 சதவிகிதம் வகிக்கிறது.
* விதைமுளைப்பதற்கும் வேர் வளர்ச்சிக்கும் மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கும் தண்ணீர் ஒர் இன்றியமையாத கூறாகும்.
தண்ணீரின் ஆதாரம் மற்றும் தேவை
தண்ணீரின் முதல் ஆதாரம் மழைநீர், ஆனால் மழைநீரானது நமக்கு வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. இதனால் மழை நீரை அணைகளில் சேமித்து தேவைப்படும் காலங்களில் பாசனத்திற்கு உபயோகிக்கலாம். மேலும் அணைகளை மட்டுமே முக்கிய ஆதாரமாக கருதாமல் மக்கள் தங்கள் பகுதியை சுற்றியுள்ள நீர் ஆதாரங்களான குள்ளம், குட்டை, ஏரி, கிணறுகளை தூர்வாரி மழை பொழிவின் போது நிலத்தடி நீர் மடத்தை உயர்த்தி பயனடையலாம்.
நீர்ப்பாசனத்தின் குறிக்கோள்கள்
* நுண்ணூட்டத்திற்கும், பயிரின் வளர்ச்சிக்கும் நீர்ப்பாசனம் மிக அவசியமாக
அமைகிறது.
* மண்ணில் உள்ள அங்ககப் பொருள்களின் மக்கும் தன்மையை துரிதப்படுத்துவதற்கும், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்திறனை துரிதப்படுத்துவதற்கும் நீர்ப்பாசனம் இன்றியமையாததாகும்.
* பயிரின் வறட்சி நிலையை அகற்றுவதற்கு.
* தீமை விளைவிக்கும் உப்பினை நீர்க்கரையோட்டம் மூலம் அகற்றுவதற்கு.
* மண்ணிலுள்ள தீமை விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு.
* மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை நிலைப்படுத்துவதற்கு.
* தரிசு நிலத்தினை பயன்படுத்துவதற்கு.
* மண்ணை உழுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு.
இந்த அனைத்து செயல்பாடுகளையும் முறையாக சீரமைத்து சிறந்த முறையில் செயல்படுவதே நீர்ப்பாசனத்தின் குறிக்கோள்கள் ஆகும்.
நீர்ப்பாசனத்தின் தேவை
நிலையில்லாத பருவமழை
இந்தியாவில் பருவ காலங்களில் 80 சதவீதம் மழை பொழிகிறது. ஆனால் இந்த பருவ மழை நிலையில்லாததால் பயிர்களின் வளர்ச்சிக்கு பாசன நீர் இன்றியமையாததாக அமைகிறது.
மழை தொடர்ச்சியின்மை
தொடர் மழைப்பொழிவு இல்லாத காலங்களில் பயிர்களுக்கு இடைப்பாசனம் தேவைப்படுகிறது.
அதிக மகசூல் தரும் பயிர்களுக்கு
அதிகளவில் மகசூல் தரும் பயிர்களுக்கு நீர் அதிக தேவைப்படுகிறது. இதனால் பாசன நீரானது பயிர்களுக்கு மிக முக்கியமாக உள்ளது.
மண்ணின் நீர் பிடிப்புத்திறன்
* களிமண் - அதிக நீர் பிடிப்புத்திறனுடையது.
* மணற்பாங்கான மண் - குறைந்த நீர்ப்பிடிப்பு திறன் கொண்டது. எனவே அதிக நீர்ப்பாசனத் தேவை ஏற்படுகிறது
K.Sakthipriya
Krishi Jagran