விவசாயிகள் இருமடங்கு லாபம் ஈட்ட விதைப்பண்ணைகளை அமைத்துப் பயன்பெறலாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
தரமான விதையே நிறைவான மகசூலுக்கு ஆதாரம். இதை உறுதிபடுத்த ஏதுவாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மைத்துறை தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் விதை உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இம்மாவட்டத்தில் நெல், சிறுதானியம், பயறு, எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடிக்கு தேவைப்படும் மொத்த விதை அளவில் 25 சதவீதம் வேளாண்மை துறையால் விநியோகம் செய்யப்படுகிறது.
தரமான விதைகள் (Quality seeds)
மாநில அரசின் விதைப்பண்ணைகள் மற்றும் விவசாயிகளின் வயல்களில் விதைப் பண்ணை அமைக்கப்பட்டு, விதைச் சான்றளிப்பு துறையின் மேற்பார்வையில் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகளை பல விவசாயிகளுக்கு வியோகம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு மாவிதை மேம்பாட்டு முகமை மூலம் கொள்முல் செய்கிறார்கள்.
நெல், சிறுதானியம், பயறு, எண்ணெய்வித்து பயிர்கள் தானியமாக விற்பனை செய்வதால் ஈட்டும் இலாபத்தை விட தரமான விதை உற்பத்தி செய்து விற்பதால் விவசாயிகள் இரு மடங்கு இலாபம் ஈட்டலாம்.
விலைக் கொள்கை
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான விதை விலைக் கொள்கை நிர்ணயித்து அனைத்து பயிர்களிலும் விதை கொள்முதல் விலைக் கூடுதலாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
உழவன் செயலி
விவசாயிகள் வேளாண்மைத்துறை உழவன் செயலியைப் பயன்படுத்தி விவசாயியின் பெயர், கிராமம், வட்டாரம், விதைப்பண்ணை அமைக்க விரும்பும் பயிர், இரகம், பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து பயன் பெறலாம்.
இதைத்தவிர, தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களை அணுகி விதைப்பண்ணைகள் அமைத்தும் பயன் பெறலாம்.
ரபி பருவம்
எனவே, வரும் ரபி பருவத்தில், விதைப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் இரு மடங்கு லாபம் ஈட்டிட விதைச்சான்று அலுவலர்கள் அளிக்கும் வழி முறைகளைப் பின்பற்றி விதைப் பண்ணை அமைத்து தரமான விதைகளை வழங்க முன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
முனைவர் எல்.சுரேஷ்
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்
செங்கல்பட்டு
மேலும் படிக்க...
தாயுள்ளத்தை வெளிப்படுத்திய சிங்கப்பெண்- முதல்வர் பாராட்டு!
அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!