Horticulture

Saturday, 28 September 2019 05:52 PM

மண்ணின் வளத்தை மேம்படுதுவதுடன் உழவர்களுக்கு கொடையாகவும் கிடைத்திருக்கிறது இந்த ஜீரோ பட்ஜெட் (Zero Budget) எனப்படும் செலவில்லா வேளாண்மை முறை. இம்முறையை பயன்படுத்தி உளுந்து சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்ட முடியும். அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து வெடித்து சிதறி விதை பரப்பும் செடி இனமாகும்.  

பொதுவாக ஒரு ஏக்கருக்கு சராசரியாக 300 கிலோ மகசூலை தரும் உளுந்தை இடு பொருட்கள் இல்லாமல் வெறும் கால்நடைகளின் கழிவுகள், இயற்கை உரத்தை மட்டும் பயன்படுத்தி செய்யப்படும் செலவில்லா வேளாண்மையில் சாகுபடி செய்தால் 650 கிலோ வரை மகசூல் கிடைக்கும். உளுந்து சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் வகைகள் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்து சமன் படுத்திக்கொள்ள வேண்டும்.

பின்னர் 150 கிலோ கன ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் ஜிவாமிர்தத்துடன் கலந்து புட்டு பதத்திற்கு பிசைந்து வயல் முழுவதும் இட வேண்டும்.  பிறகு 20 அடி நீளம், 15 அடி அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து கொள்ளலாம். ஒரு எக்டருக்கு 20 கிலோ விதை போதுமானது.  ஆடுதுறை 3, வம்பன் 1, ஆடுதுறை 5 போன்ற ரகங்கள் செலவில்லா வேளாண்மை முறையில் அதிக லாபத்தை தரக்கூடியவை.

விதைப்பிற்கு முன்பு தேர்வு செய்த உளுந்து விதைகளை பீஜாமிர்த கரைசலில் அமிழ்த்தி விதை நேர்த்தி செய்து கொள்ள வேண்டும். இதனால் விதைகள் வீரியத்துடன் வளரும். பின்னர் நேர்த்தி செய்த விதைகளை உலர்த்த வேண்டும். உலர்ந்த விதைகளை பரவலாக விதைத்து நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் மேலோட்டமாக ஒரு தரவை உழுதல் முக்கியமாகும்.

மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து தேவைக்கேற்ப நீர் பாய்ச்சி கொள்ளலாம். விதைத்த 15 வது நாளிலும் மற்றும் 30 வது நாளிலும் களை எடுக்க வேண்டும். உளுந்து விதைத்த 7 ஆம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை 80 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15 ஆம் நாள் 5 லிட்டர் புகையிலை, மிளகாய் கரைசலை 120 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இவ்வகை தெளிப்பான்கள் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும். பின்னர் 10 நாள் இடைவெளிக்கு ஒரு முறை 60 லிட்டர் ஜீவாமிர்தத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 45 ஆம் நாள் 5 லிட்டர் தேமோர் கரைசலை 115 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் செடிகள் நன்கு செழித்து வளரும். இந்த கரைசல்கள் அனைத்தையும் மாலை நேரங்களில் தெளித்தால் செடிகள் நன்கு வீரியத்துடன் வளரும்.

65 நாட்களில் உளுந்து அறுவடைக்கு தயாராகி விடும். முதிர்ந்த காய்களை பறித்து உலர்த்துதல் அவசியமாகும். அறுவடை செய்யும் போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும், இல்லையெனில் முழு தாவரத்தை வெட்டி எடுக்கலாம். பின்னர் குவித்து வைத்து உலர்த்தி பயிர்களை பிரிக்கலாம். செலவில்லா வேளாண்மை முறையில் பயிரிடும் உளுந்துடன் ஊடுபயிராக தட்டப்பயிறு சாகுபடி செய்யதால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

இவ்வாறு இயற்கை முறையிலும், செலவில்லா வேளாண்மை முறையிலும் உளுந்து சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம்.  

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)