தமிழகத்தில் முருங்கை மிக எளிதில் கிடைக்கக்கூடியது. முருங்கை இலையின் (Drumstick Leaf) பயன்களை வெளிநாட்டவர் உணர்ந்து மதிப்பு கூட்டிய பொருளாக சாப்பிடுகின்றனர். எனவே 1200 முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து குறைந்தபட்சம் 5000 ஏக்கரில் முருங்கை விவசாயத்தை கொண்டு வரவேண்டும் என்கிறார் திண்டுக்கல் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த பாட்டன் விவசாய உற்பத்தி நிறுவனத் தலைவர் நாச்சிமுத்து. மற்ற கீரைகளுடன் ஒப்பிடும் போது முருங்கை இலையில் மட்டும் 9 வகையான பைட்டோகெமிக்கல் உள்ளன. அதனால் வெளிநாடுகளுக்கு அதிகளவில் இலையாக, பொடியாக, மாத்திரையாக (Tablets), குக்கீஸ் உட்பட பல்வேறு வகையான உணவுப் பொருட்களாக அனுப்பப்படுகிறது. இதுவரை 250 விவசாயிகளை ஒருங்கிணைத்துள்ளார். நாச்சிமுத்து
விவசாயிகளை ஒருங்கிணைக்க திட்டம்
தற்போது ஒரு கிலோ உலர்ந்த இலை ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கிறது. விவசாயிகளிடம் இதே விலைக்கு நாங்களும் வாங்குகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர் மற்றும் துாத்துக்குடியில் வளர்க்கப்படும் முருங்கை இலைகளுக்கு தனித்துவம் உள்ளது. எனவே இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 200 விவசாயிகள் வீதம் 1200 விவசாயிகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ரசாயன கலப்பில்லா இயற்கை வழி தொழில்நுட்பங்களை (Organic Techniques) கற்றுத் தர உள்ளோம். முருங்கைக்காய் சீசன் (Drumstick Season) போது கிலோ ரூ.20 கூட கிடைக்காது. எனவே சீசன் இல்லா காலத்தில் முருங்கைக்காய் உற்பத்தி செய்யும் வகையில் கோவை வேளாண் பல்கலையுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம்.
முருங்கைக்கான உலக வர்த்தக மையம்
மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தில் (அபிடா) முருங்கைக்கான குறியீட்டு எண் கூட இல்லை. எனவே குறியீட்டு எண் கொடுப்பதோடு முருங்கை விளையும் இந்த ஆறு மாவட்டங்களை சிறப்பு மண்டலமாக அபிடா அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். முருங்கை இலையின் சிறப்புகளை உலகறியச் செய்யும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிப்காட்டில் முருங்கைக்கான உலக வர்த்தக மையம் (World Trade Center) உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
நம் ஊரில் மதிப்பு கூட்டி தயாரிக்கப்படும் முருங்கை இலை ஜூஸ், மாத்திரை, தொக்கு, மயோனைஸ், சீரம், சட்னி ஆகிய பொருட்களை கண்காட்சியாக வைப்பதோடு வெளிநாட்டவர் எந்தவடிவில் இலையை விரும்புகின்றனர் என்பதையும் காட்சிப்படுத்தி வைக்க உள்ளோம். இதன் மூலம் முருங்கையில் புதிய தொழில்முனைவோர் (New Entrepreneurs) உருவாகலாம். வாங்குவோர் விற்போர் சந்திப்புக்காக வெளிநாட்டவர்களை அழைத்து அவர்களின் தேவையை நிறைவேற்ற உள்ளோம். ஆகஸ்ட் மாதத்தில், இம்மையம் தயாராகிவிடும். அதன் பின் முருங்கை இலையின் அருமையை அனைவரும் உணருவோம் என்றார்.
மேலும் தகவலுக்கு - 93675 50555.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தேசிய வாழை ஆராய்ச்சி மைய முயற்சியால் லண்டனுக்கு ஏற்றுமதியான நேந்திரம் வாழைத்தார்கள்
அதிக மழையால் ஏலக்காய் விளைச்சல் அதிகரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி