இயற்கை முறையில் நாம் மண்வளத்தை பாதுகாக்க பல வழிமுறைகள் உள்ளன. பொதுவாகவே வேளாண் கழிவுகளை அதே நிலத்திற்கு இயற்கை உரமாகவோ அல்லது எருவாகவோ பயன்படுத்துவதன் மூலம் மண்ணிற்கு தேவையான தழைச்சத்து கிடைக்கிறது.
கரும்புத் தோகையை கொண்டு இயற்கையான முறையில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பதன் மூலம் அதன் தோகைகளை வீணாக்காமல் நம்மால் பயன் படுத்த முடியும். ஒவ்வொரு கரும்பு அறுவடையின் போதும் அதன் எடையில் இருந்து 20 % தோகையை கழிவாக வெளியேற்ற படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இதனை எரித்து விடுகின்றனர்.இதனால் சுற்றுசூழல் மாசடைவதுடன் மண்வளம் பாதிக்க படுகின்றன.
கரும்பு தோகை எரிப்பதனால் ஏற்படும் விளைவுகள்
- மண்ணில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மடிந்து விடும்.
- தோகை எரிப்பதன் மூலம் மண்ணில் உள்ள கந்தக மற்றும் தழைச் சத்துக்கள் காற்றில் விரயமாகின்றன.
- நிலத்தில் இரும்புச் சத்து குறைபாடு அதிகரிக்கிறது.
- கரும்புத் துார்களின் முனைகள் கருகி, மறுதாம்பு பயிரில் எண்ணிக்கை குறைந்து, கரும்பு மகசூலும் குறைகிறது.
கம்போஸ்ட் உரம் இயற்கை/ இரசாயன முறையில் தயாரிக்கும் முறை
இயற்கை முறையில் கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் முறை
இயற்கை முறையில் கம்போஸ்ட் உரம் தயாரிக்க, கரும்புதோகையை கரும்புதூர்களில் இருந்து விலக்கி அவற்றை நன்கு நனையும் படி நீர் பாய்ச்சி அதன் மேல் காளான் விதைகளை தூவி, பின் அவற்றின் மீது மண் பரப்பி மீண்டும் நீர் பாய்ச்சி விட்டால் ஒரு சில மாதங்களில் கரும்பு தோகையானது நன்கு மட்கி இயற்கை உரம் கிடைத்து விடும்.
இரசாயன முறையில் கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
- கரும்பு தோகை - 100 கிலோ
- ராக்பாஸ்பேட் மற்றும் ஜிப்சம் - 2 கிலோ
- யூரியா - 1 கிலோ
- மண், மாட்டுச்சாணம், மக்கிய குப்பை - 5 கிலோ
- தண்ணீர் - 100 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதலில் நிலத்தை தயார் செய்ய வேண்டும். 7 க்கு 3 மீட்டர் பரப்பில், 15 செ.மீ., உயரத்தில் 100 கிலோ கரும்பு தோகையை பரப்ப வேண்டும். அதன் பின் ராக்பாஸ்பேட், ஜிப்சம் போன்றவற்றை யூரியாவுடன் கலந்து அதன் மேல் ஒரு கிலோ கலந்து துாவ வேண்டும். மண், மாட்டுச்சாணம், மக்கிய குப்பை போன்றவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து கரும்பு தோகை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். இதுபோல ஒரு மீட்டர் உயரத்தில் தோகை படுக்கைகள் அமைத்து, கடைசி அடுக்கின் மீது 1:1 என்ற வீதத்தில் கலந்து 5 செ.மீ., உயரத்திற்கு மூடிவிட வேண்டும். அவ்வப்போது இதன்மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும். ஐந்து மாதங்களில் தோகைகள் நன்கு மக்கி தரமான ஊட்டமேற்றிய கம்போஸ்ட் உரம் கிடைத்து விடும்.
Anitha Jegadeesan
Krishi Jagran