'பெர் டிராப் மோர் கிராப்' சொட்டு நீரில் அதிக விளைச்சல் திட்டத்தின் கீழ் பல்வேறு மாநில விவசாயிகளுக்கு உதவ ரூ. 4000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன உபகரணங்களை மானியத்தில் பெற இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெர் டிராப் மோர் கிராப்' திட்டம் - (Per Drop More Crop)
பிரதமர் கிருஷி சின்சாயி யோஜனா(PM Krishi Sinchayee Yojana)-வின் ஒருபகுதியாக பெர் டிராப் மோர் கிராப் (Per Drop more crop)என்ற திட்டத்தினை மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டமானது விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பான் பாசன முறைகள் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன நுட்பங்களை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பமானது, நீரை சேமிப்பது மட்டுமல்லாமல் உரப்பயன்பாடு, தொழிலாளர் ஊதியம் மற்றும் பிற செலவினங்களையும் குறைக்கிறது.
நிதி ஒதுக்கீடு
பிரதமர் கிருஷி சின்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில், இத்திட்டத்திற்காக ரூ.4000கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நபார்டு வங்கியுடன் இணைந்து, ரூ.5000 கோடி மதிப்புள்ள குறு நீர்ப்பாசன நிதியமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நீர்ப்பாசன நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ.478.79 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 1.76 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் பயன்பெற்று வருகிறது..
மானியத்தில் உபகரணங்கள்
இந்த திட்டத்தின் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன உபகரணங்கள் அரசு நிர்ணயித்த தொகையில் இருந்து சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் மூலம் மானியமும் வழங்கப்படுகிறது.
டீசல் மற்றும் மின் மோட்டார்களை வாங்க அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாயும், குழாய் அமைக்க 10 ஆயிரம் ரூபாயும், தரை மட்டத்தில் தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டி கட்டுவதற்கு 40 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும். இதில், ஆதிஇன வாசிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தில் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், அடங்கல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று அல்லது கிசான் நிதியுதவி பெற்ற சான்று, ஆதார், ரேஷன் அட்டை நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பித்துடன் இணைத்து தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
விவசாய பயிர்களுக்கு - மாவட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவகத்திலும், தோட்ட பயிர்களுக்கு - வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
PMFBY: காரீஃப் பயிர்களுக்கான காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி!
50 % மானியத்தில் சூரிய ஒளி மின் வேலி திட்டம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!