பலாப் பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று பலா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கனிகளில் இரண்டாவது கனி பலாப்பழம். தாயகம் இந்தியாவானாலும், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளா, ஒடிசா, அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிரிடப்படுகிறது
தமிழகத்தைப் பொருத்த வரை கடலூர் மாவட்டத்தில் தான் அதிகமாகப் பலாப் பழங்கள் விளைவிக்கப்படுகிறது. சுமார் 800 ஹெக்டோ் பரப்பளவில் பலாப் பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இதிலும் குறிப்பாக 600 ஹெக்டோ் பரப்பளவு பண்ருட்டி பகுதியில் உள்ளது.
பண்ருட்டி பலா
பண்ருட்டி பகுதியில் ஒரு ஹெக்டரில் ஆண்டுக்கு சுமார் 15 டன் பலா பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பலா பலத்திற்குத் தமிழகத்தில் தனி மவுசு உண்டு இதனால் இங்கு விளையும் பலாக்களில் சுமாா் 95 சதவீதம் பழங்களாகவே நுகரப்படுவதால், இந்தப் பகுதி விவசாயிகள் பலாவிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதில்லை.
பலாப்பழ விற்பனை சரிவு
இந்நிலையில் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக , தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலா பழத்தின் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்ய ஆளின்றி பழங்கள் மரத்திலேயே அழுகிக் போகின்றன. இதனால் பலாப் பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் முயற்சியில் இப்பகுதி மக்கள் இறங்கியுள்ளனர்.
மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிக்க முடிவு
இந்தியாவை பொருத்த வரை கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாகப் பலாப் பழங்களிலிருந்து மதிப்புக் கூட்டுப் பொருள்களைத் தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை வருவாய் ஈட்டுகின்றனர். கர்நாடக மாநிலத்திலும் இதற்கான முயற்சி தொடக்க நிலையில் உள்ளது.
மேலும் படிக்க..
சத்துப்பேழை பலாப்பழம் - மருத்துவ குணங்கள் ஏராளம்!
வாழையில் சருகு அழுகல் நோய்: தோட்டக்கலைத்துறை ஆய்வு!
இதே தமிழகத்தின் சில பகுதிகளில் பலா பழங்களை கொண்டு மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதிக விளைச்சலை விளைவிக்கும் பண்ருட்டி பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் பலா பழங்களிலிருந்து மதிப்புக்கூட்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதில்லை.
இந்த கொரோனா காலத்தில் பொருளாதார பிரச்சனையை சமாளிக்க பலாவிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்க பண்ருட்டி பலா விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். தொழில் முனைவோருக்கு அரசு உரியப் பயிற்சி அளித்து இதற்கான நிதி உதவியும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.