விவசாயிகளிடம் தேவையற்ற இடுபொருட்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது என உரக்கடைகளுக்கு நாகை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆட்சியர் ஆய்வு (Collector inspection)
நாகப்பட்டினம் மாவட்டம் பரவை கிராமத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில் ஆட்சியர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர், ஆட்சியர் பேசியதாவது:
புகார்கள் (Complaints)
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சில்லறை உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையைவிடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் உரங்களை இருப்பு வைத்திருப்பது உள்ளிட்ட புகார்கள் வந்துள்ளன.
மீறுவதுக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இதுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரக் கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உர விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் விலைப்பட்டியல் அடங்கிய விவரப் பலகையைப் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் பிற தேவையற்ற இடுபொருட்களை கட்டாயத்தின்பேரில் விற்பனை செய்யக்கூடாது. உர மூட்டைகளின் எடை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.
புகார் அளிக்க (To complain)
விவசாயிகள் உரங்கள் மற்றும் அதன் தொடர்பாக புகார்களை 7397671300 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தெரிவிக்கவும்.
ஆட்சியர் எச்சரிக்கை (Collector warning)
உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் பிற தேவையற்ற இடுபொருட்களை கட்டாயத்தின்பேரில் விற்பனை செய்யக்கூடாது என நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) என்.குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு வீடு தேடி வரும் டீசல்!!
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!