விதையில் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு விதைப்பதன் மூலம் மழைக்கால மகசூல் இழப்பை விவசாயிகள் தடுக்க முடியும் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சம்பா சாகுபடி (Samba cultivation)
சேலம் மாவட்ட விவசாயிகள், நடப்பு பின் சம்பா பருவத்தில் நாற்று விட்ட விவசாயிகள் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் நாற்றுக்களை இழந்து மீண்டும் நீண்ட கால நெல் ரகங்களை அல்லது நவரைப் பருவத்திற்கான குறுகிய கால இரகங்களை நாற்று விடும் அவசியத்தில் இருக்கிறீர்கள்.
எனவே ஏற்கனவே சேமித்து வைத்துள்ள நெல் விதைகளோ அல்லது விற்பனையாளர்களிம் இருந்துப் பெறப்பட்ட நெல் விதைகளோ அதிக ஈரப்பதத்தின் காரணமாக பூஞ்சான் அல்லது பூச்சி பாதிப்புக்கு உள்ளாகி குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரத்தில் இருந்து பின் தங்கி இருக்க அதிக வாய்ப்புள்ளது.
பயிர் இழப்பு (Crop loss)
எனவே தங்களிடமுள்ள விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றினை முன்கூட்டியே அறிந்து விதைப்பதனால் இனிவரும் காலங்களில் ஏற்படும் பயிர் இழப்பினை தடுக்கலாம்.
விதைகளின் முளைப்புத்திறனை முன்கூட்டியே அறிந்து விதைப்பதன் மூலமாக விதையின் அளவை முளைப்புத் திறனுக்கு ஏற்றவாறு சரியாக கணக்கிட்டு பயன்படுத்த ஏதுவாகிறது. முளைப்புத்திறன் அறிந்து சரியான அளவில் விதைப்பதன் மூலமாக நாற்றுப் பற்றாக்குறை இல்லாமல் தேவையான நாற்றுக்களைப் பெற்று நடவு மேற்கொள்ளலாம்.
எனவே தாங்கள் தயார் நிலையில் வைத்துள்ள ஒவ்வொரு விதைக் குவியலில் இருந்தும் 100 கிராம் நெல் விதைகளை எடுத்து துணிப்பைகளில் இட்டு, விதை மாதிரியினுள் பயிர், இரகம், குவியல் எண் போன்ற விவரங்களைக் கொண்ட சீட்டினை வைத்து விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து விதையின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்.
ரூ.30 கட்டணம் (Fee)
விதைப் பரிசோதனை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்களின் முழு முகவரியை சரியாக குறிப்பிட்டு விண்ணப்பக் கடிதத்தினை, விதை மாதிரியுடன் இணைத்து கொடுத்தல் அவசியமாகும்.
முளைப்புத்திறனுடன் விதையின் ஈரப்பதத்தினையும் அறிய விரும்பும் விவசாயிகள் ஒரே விதைக் குவியலில் இருந்து 200 கிராம் விதைகளை எடுத்து 100 கிராம் விதைகளை துணிப்பையினுள்ளும், மீதமுள்ள 100 கிராம் விதைகளை காற்று புகாத பாலிதீன் பையின் உள்ளேபோட்ட, விதை மாதிரி விவரங்களைக் குறிப்பிட்டு கொடுக்கலாம். விதைப் பரிசோதனை மேற்கொள்ள ஒவ்வொரு மாதிரிக்கும் ரூ.30/- வசூலிக்கப்படும்.
விண்ணப்பக் கடிதத்தினை இவற்றுடன் இணைத்து விதைப் பரிசோதனை நிலையம், அறை எண் 403, 4 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் - 636 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இத்தகவலை சேலம் மாவட்ட விதைப் பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு வீடு தேடி வரும் டீசல்!!
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!