
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தென்னந்தோப்புகளில் வட்ட பாத்தி மற்றும் வரப்புகள் அமைக்க விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த பணிகளுக்கு ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை சாகுபடி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் தென்னை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. தென்னந்தோப்புகளில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சுற்றிலும் வட்டப்பாத்திகள் எடுக்கவும், வரப்புகள் அமைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை
இதற்கு எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். கிராம ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள், அதே ஊரில், ஆதார் முகவரி உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
மத்திய அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில், ஊராட்சிகளுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார், அடங்கல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ-2, ஆகியவற்றுடன், மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, துங்காவி, மெட்ராத்தி, தாந்தோணி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, கடத்தூர், மைவாடி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரனை 96598 38787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல், வேடப்பட்டி, சோழமாதேவி, கொழுமம், பாப்பான்குளம் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் நித்யராஜை 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!