சத்துக்கள் நிறைந்த பழப்பயிர்களில் முதன்மையானது கொய்யாவாகும். அனைத்து வகை மண்ணிலும் நடவு செய்து அதிக மகசூல் பெறலாம். வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய கொய்யாவிற்கு, குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. முறையாக பராமரித்தால் 18 மாதங்களில் அறுவடை செய்து இலாபம் பெறலாம்.
இரகங்கள்
அலகாபாத், லக்னோ - 46, லக்னோ - 49, அனகாபள்ளி, பனாரஸ், ரெட் பிளஷ், அர்கா அமுல்யா, அர்கா மிருதுலா மற்றும் டிஆர்ஒய் (ஜி) 1.
மண் மற்றும் தட்பவெப்பநிலை
கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதிகளில் நன்கு வளரும். அனைத்து மண் வகைகளிலும் இப்பயிர் விளைந்தாலும் வடிகால் வசதி மிகவும் முக்கியம். ஆழமற்ற அடி பாறைகள் உள்ள மண்வகைகளிலும், களிமண் பூமியிலும் நன்கு வளரும். களர் மற்றதம் உவர் நிலங்களிலும், தாங்கி வளரும். மூன்றாண்டிற்கு ஒரு முறை செடி ஒன்றுக்கு 3 கிலோ ஜிப்சம் இடவேண்டும். இதன் மூலம் மண்ணின் களர் உவர் தன்மையை குறைக்கலாம்.
பயிர் பெருக்கம்: பதியன்கள்
நடவு பருவம்: ஜீன் - டிசம்பர்
விதையும் விதைப்பும்
நடவு செய்தல்
5 மீட்டருக்கு 6 மீட்டர் என்ற இடைவெளியில் குழிகள் குறிக்கப்படவேண்டும். பின்னர் 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலாம் மற்றும் 45 செ.மீ ஆழம் என்ற அளவில் குழிகளை தோண்டி அவற்றினுள்ள, 10 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு இவற்றுடன் மேல் மண்ணையும் இடவேண்டும். பின்னர் செடிகளை குழிகளின் சரிமத்தியில் நடவேண்டும்.
நீர் நிர்வாகம்
ஆரம்ப காலங்களில் நடவு செய்தவுடன் ஒரு முறை, மூன்றாம் நாள் ஒரு முறை, பின்னர் பருவ நிலையைப் பொறுத்து 10 நாட்களுக்கு ஒரு முறை என நீர்ப்பாய்ச்சவேண்டும் அல்லது தேவை ஏற்படின் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உர நிர்வாகம்
மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு மரத்திற்கு தொழு உரம் 50 கிலோ, ஒரு கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டாகப் பிரித்து இடவேண்டும்.
கொய்யாவில் மகசூலை மேம்படுத்த, யூரியா 1 சதம் மற்றும் துத்தநாக சல்பேட் 0.5 சதம் இரண்டும் கலந்து கலவையை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில், மரங்களின் மேல் இலைவழி உணவாகத் தெளிக்க வேண்டும்.
போரான் சத்து குறைபாடு இருந்தால், பழங்கள் சில நேரங்களில் வெடித்து காணப்படும். கடினமாகவும் இருக்கும். இலைகள் சிறுத்துக் காணப்படும். இக்குறைபாட்டைத் தவிர்க்க, 0.3% போராக்ஸ் தெளிக்கவேண்டும். (1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் போராக்ஸ் மருந்தைக் கரைக்கவேண்டும்).
நுண்ணூட்டச் சத்துக்குறைபாடு நிவர்த்தி
நூண்ணோட்டச் சத்துக் குறைபாட்டினால், இலைகள் சிறுத்தல், கணுக்களிடையே இடைவெளி குறைந்து செடிகள் குத்துச்செடிகள் போல தோற்றம் தருதல், இலைகள் வெளிர்தல், ஓரங்கள் தீய்ந்த தோற்றம் முதலியவை ஏற்படும். அதனை நிவர்த்த செய்ய 25 கிராம் துத்தநாக சல்பேட், மக்னீசியம் சல்பேட், மாங்கனீஸ் சல்பெட் மற்றும் 12.5 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் பெர்ரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நிரில் கரைத்து அதனுடன் ஒரு மில்லி ஒட்டும் திரவமாகிய டீப்பால் கலந்து நான்று முறை கீழ்க்கண்ட தருணங்களில் தெளிக்கவேண்டும்.
- புதிய தளிர்கள் தோன்றும்போது
- ஒரு மாதம் கழித்து மறுமுறை
- பூக்கும் தருணம்
- காய் பிடிக்கும் தருணம்
ஊடுபயிர்
அவரை வகைப் பயிர்கள் மற்றும் குறைந்த வயதுடைய காய்கறிப் பயிர்களை கொய்யா காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராகப் பயிர் செய்யலாம்.
கவாத்து செய்தல்
செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் பொதுவாக கவாத்து செய்ய வேண்டும். செடிகளின் அடிப்பாகத்தில் அவ்வப்போது தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். மேலும் ஒரு பருவத்தில் காய்ப்பு முடிந்தவுடன் வறண்ட மற்றும் உபயோகமில்லாத குச்சிகளை நீக்கிவிட வேண்டும். ஓங்கி உயரமாக வளர்ந்துள்ள கிளைகளை வளைத்து அவற்றின் நுனிப் பாகத்தை மண்ணுக்குள் சுமார் ஒரு அடி ஆழம் வரை பதித்து அவை மேலே கிளர்ந்த வரமல் செய்ய வேண்டும். வயதான மற்றும் உற்பத்தித் திறன் இழந்த மரங்களைத் தரை மட்டத்திலிருந்து 75 செ. மீ உயரத்தில் வெட்டிவிட வேண்டும். இதிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
தேயிலைக் கொசு
இது பழங்களின் மேல் துளையிட்டு உள்ளிருக்கும் பழச்சாற்றை உறிஞ்சுகிறது. இதனால் பழங்களின் தேல் பகுதி கடினமாகி கரும்புள்ளிகள் தோன்றும்.
கட்டுப்பாடு
மாலத்தியான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். வேம்பு எண்ணெயை 3 சதம் அடர்த்தியில் தெளிப்பதனால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். இவ்வாறு மருந்து தெளிக்கப்பட்ட மரங்களிலிருந்து கனிகளை உடனே அறுவடை செய்தைத் தவிர்க்கவேண்டும்.
அசுவினி
பூச்சிகள் செடிகளில் உள்ள சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துதல்.
கட்டுப்பாடு
மானோகுரோட்டபாஸ் அல்லது டைமித்தோயேட் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பழ ஈ
பூச்சிகள் பழங்களினுள் நுழைந்து சேதப்படுத்தும், இதனால் பழங்கள் உதிர்ந்துவிடும்.
கட்டுப்பாடு
மாலத்தியான் 50 ஈசி மருந்துகளில் ஏதேனும் இடைவெளியில் நான்கு முறை தெளிக்கவேண்டும்.
செதில் பூச்சி
இலைகள் மற்றும் பழங்களில் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
கட்டுப்பாடு
ட்ரைசோபாங் 2 மில்லியுடன் வேப்பெண்ணெய் 5 மில்லி கலந்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவேண்டும். அல்லது பாசலோன் 0.05 சதம் உடன் வேப்பெண்ணெய் 5 மில்லி கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்கவேண்டும்.
இந்தப்பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் ஒருவகைப் புள்ளி வண்டுகளை ஒரு மரத்திற்கு 10 வீதம் விட்டுக் கட்டுப்படுத்தலாம்.
சொறிநோய்
பழங்கள், பழுக்கும் முன்பு, கரிய கடினமான பகுதிகள் தோன்றிப் பழங்களை சேதப்படுத்தும்.
கட்டுப்பாடு
காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 சதம் அல்லது போர்டோக் கலவை 0.5 சதம் தெளிக்கவேண்டும்.
அறுவடை
பதியன்கள் நட்ட 2ம் வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும். பிப்ரவரி முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ஒரு முறையும், செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ஒரு முறையும் காய்க்கும். பூத்ததலிருந்து 5 மாதங்கள் கழித்து கனிகளை அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 25 டன்கள்.
Anitha Jegadeesan
Krishi Jagran