முந்தைய ஆண்டை விட 2022-23 ஆம் ஆண்டில் தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்தியில் குறைந்தபட்ச அதிகரிப்பு இருக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. பழங்கள், காய்கறிகளில் ஓரளவு உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில் மற்ற விளைபொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளன.
இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தோட்டக்கலையின் மொத்த பரப்பளவு உயர்ந்துள்ளது. தோட்டக்கலை பயிரிடல் மூலமாக பழங்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி மற்றும் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் சாகுபடி சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் தோட்டக்கலை உற்பத்தி 2022-23-ல் 350.87 மில்லியன் டன்களாக (MT) மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட ஒரிரு சதவீதம் அதிகம். 2021-22-ல் தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்தி 347.18 MT ஆக இருந்தது.
பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி:
கடந்த மூன்று ஆண்டுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2020-21 அளவுகளில் இருந்து ஒப்பிடுகையில் பழங்கள் சுமார் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் காய்கறி உற்பத்தி 4.34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதேபோல், வெங்காய உற்பத்தி சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தது.
எவ்வாறாயினும், முந்தைய ஆண்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது உற்பத்தி நிலையானதாகத் தெரிகிறது. 2021-22-ல் 107.51 மெட்ரிக் டன்னாக இருந்த பழங்களின் உற்பத்தி 2022-23-ல் குறைந்தபட்சமாக 107.75 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. வெங்காயம் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது.
2021-22-ல் 31.69 மெட்ரிக் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டது, 2022-23-ல் 31.01 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. அதேசமயம், 2021-22-ல் 209.14 மெட்ரிக் டன்னாக இருந்த காய்கறி உற்பத்தி, 2022-23-ல் 212.53 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
தக்காளி உற்பத்தி எப்படி?
தக்காளி உற்பத்தி ஓரளவு குறைந்துள்ளது, அதே நேரத்தில் வாசனை மற்றும் மருத்துவ பொருட்களின் உற்பத்தி 16 ஆயிரம் டன் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 20.69 மெட்ரிக் டன்னாக இருந்த தக்காளி, நடப்பு ஆண்டில் 20.62 மெட்ரிக் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உருளைக்கிழங்கு உற்பத்தி 3.5 மெட்ரிக் டன் அதிகரித்து, 2022-2-3ல் 59.74 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், "விவசாயிகளின் கடின உழைப்பு, விஞ்ஞானிகளின் திறமை மற்றும் அரசின் கொள்கைகள் காரணமாக தோட்டக்கலை மூலம் வேளாண் பொருட்கள் உற்பத்தியில் சாதனை படைக்க முடிந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும் காண்க:
70 வயது விவசாய தொழிலாளியை நேரில் அழைத்து பாராட்டிய இறையன்பு- என்ன விஷயம்?