மே மாத இறுதியில் தொடங்க உள்ள ஏற்காடு மலர் கண்காட்சியினை முன்னிட்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் 2.5 லட்சம் வகையான மலர்கன்றுகளுக்காக விதைகள் விதைக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி எனப் புகழப்படுவது ஏற்காடு. தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகவும் ஏற்காடு திகழ்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைக்கால விடுமுறை நெருங்கும் நிலையில் ஆண்டுத்தோறும் மே மாதத்தின் இறுதியில் ஏற்காட்டில் தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. தமிழகம் மட்டுமின்றி பிற மாநில சுற்றுலாப்பயணிகள் என லட்சக்கணக்கோனார் இந்த மலர் கண்காட்சிக்கு வருகைத் தரும் நிலையில், அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறை அலுவலர் வி.திவ்யதர்ஷினி கூறுகையில், மலர் கண்காட்சிக்காக மலர் செடிகளை வளர்ப்பது வழக்கம். 44 வகையான மலர் மரக்கன்றுகளில் இருந்து 2.5 லட்சம் பூக்கள் கிடைக்கும் என்றார். திசு வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் 40 வகையான டேலியா மலர் மரக்கன்றுகளும் தங்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
டேலியா மலர் ஏற்காட்டில் மிகவும் பிரபலமானது, அந்த பூவை 'ஏற்காடு ரோஸ்' என்றும் அழைப்பர். "சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பார்வையாளர்கள் வழக்கமாக டேலியா மலர் கன்றுகளை வாங்குவது வழக்கம், அதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய வண்ண மலர்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்" என்றும் அவர் கூறினார்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தற்போது பான்சி, சால்வியா, பிரஞ்சு சாமந்தி, பெட்டூனியா, டயந்தஸ், ஆன்டிரிஹினம், ஆஸ்டர், அலிசம், இன்கா சாமந்தி, காஸ்மோஸ் குள்ளர், கோம்ப்ரீனா, ஹோலிஹாக், ஃப்ளோக்ஸ், ஜின்னியா, பிகோனியா, கபவுண்டெம், கார்னேஷன், இம்பாடியம், சாமந்தி, கார்னேஷன், இம்பட்டினம் பெண்டாஸ், இனிப்பு வில்லியம், லில்லியம் மற்றும் பல வகை மலருக்கான விதைகளை விதைத்துள்ளன.
அண்ணா பூங்கா, ஏரித்தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றில் உள்ள புல்வெளிகளை சீரமைக்கும் பணி, புற்களால் ஆன பொம்மைகளை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கோடை விழா மலர்க் கண்காட்சியின் போது, மலர்ச் சிற்பங்கள் குறித்து திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப மலர்ச் சிற்பங்கள் அமைக்கப்படுவதும் வழக்கம்.
மலர்ச் சிற்பங்களுக்காக கொய்மலர் விதைகள், டேலியா நாற்றுகள் ஆகியவற்றை, 10 ஆயிரம் மலர்ந்தொட்டிகளில் நடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இவற்றில் சில வகை மலர்கள் 2 மாதத்திலும், சில வகைகள் 3 மாதத்திலும் பூக்கக் கூடியவை, எனவே, இப்போதே மலர்ச்செடிகளையும் விதைகளையும் நடவு செய்து பராமரிப்பி ஈடுபடுகின்றனர். இதுதவிர, ரோஜா தோட்டத்திலும் பலவகை ரோஜாக்களைக் கொண்ட தோட்டத்தை உருவாக்க, 4 ஆயிரம் ரோஜாச் செடிகள் கவாத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு நடைபெற உள்ள மலர் கண்காட்சியில் பார்வையாளர்கள் முற்றிலும் புதிய ரகங்கள் மற்றும் வண்ணமயமான பூக்களைப் பார்ப்பார்கள் என்று தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் காண்க:
கோவை மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை தொடங்கி வைத்தார் ஆட்சியர்
சென்னையில் மழை வெள்ள அபாயத்தை குறைப்பது எப்படி? முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு