புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தில், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மற்றும் கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் இணைந்து நடத்தும், மாபெரும் எண்ணெய் பனை நடவு விழாவில், பனை கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., நேற்று (05.11.2024) துவக்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.
தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாயம் சார்ந்த உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மற்றும் கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் இணைந்து மாபெரும் எண்ணெய் பனை நடவு விழாவினை நடத்தினர்.
நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தவை:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஆகிய வட்டாரங்களில் சுமார் 60.00 ஹெக்டர் பரப்பளவில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் பனை சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் (NMEO Oil Palm) எண்ணெய் பனை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாமாயில் பழக்குலைகளுக்கு (Fruit Bunches) மத்திய, மாநில அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை டன் ஒன்றிற்கு ரூ.15,293/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் பனை திட்டமானது கோட்ரேஜ் (Godrej) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மானியத்தில் மின்மோட்டார்:
எண்ணெய் பனை சாகுபடி செய்வதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதனால் தேர்வு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பரப்பு விரிவாக்கம், பராமரிப்பு (4 வருடத்திற்கு) ஊடுபயிர் சாகுபடி செய்தல், எண்ணெய் பனை சாகுபடிக்கான உபகரணங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் ஆகிய இனங்களின் கீழ் தோட்டக்கலை துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. எண்ணெய் பனை நடவு செய்து மூன்று முதல் நான்கு வருடங்களில் பழங்கள் அறுவடைக்கு வந்துவிடும். நடப்பு நிதியாண்டிற்கு 20 ஹெக்டர் பரப்பு விரிவாக்கம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, துணை இயக்குநர் (தோட்டக்கலை) கு.அழகுமலை, தலைமை சந்தை நிர்வாக மேலாளர் (கோத்ரேஜ்) என்.முத்துசெல்வன், எண்ணெய் பனை சாகுபடி முன்னோடி சீனிவாசன், விவசாயிகள் சுப்பிரமணியன், சீனிவாசன் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
நெருங்கும் இறுதி தேதி- பயிர் காப்பீட்டினை விவசாயிகள் மேற்கொள்ள அரசு புது முன்னெடுப்பு!
அதிக மகசூல் தரும் டி.எம்.வி.14 (TMV 14) நிலக்கடலை இரகம்- கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?