தமிழகம் முழுதும் சம்பா நெல் சாகுபடிக்குத் தயாராகி வரும் விவசாயிகள் நல்ல விதையைத் தேர்வு செய்துக் கூடுதல் மகசூல் பெற வேண்டுமென வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
விதைகளே ஆதாரம் (The seeds are the source)
தமிழகத்தின் பல மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனர். விளைச்சலுக்கு ஆதாரம் வித்தே.
பயிர்கள் நன்கு வளர்ந்து முழுமையான பலன் தர மூலக்காரணமாக விளங்குவது நல்ல தரமான விதையே. தரமான சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்துவதால் மட்டுமே 20 சதவிகித கூடுதல் மகசூல் பெற இயலும்.
எனவே விவசாயிகள் அனைவரும் விதையைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
பலன் இருக்காது (There will be no benefit)
சம்பா சாகுபடி தொடங்குமுன் நல்ல விதை எது என்று அறிந்து கொள்வது மிக இன்றியமையாதது. ஏனென்றால் உழவர்கள் விதைகளைச் சான்று அட்டை இல்லாமல் அரசு உரிமம் பெறாத தனியார் நிறுவனங்களில் வாங்கிப் பயன்படுத்துவதால் விதைகள் சரியாக முளைக்காமல் இருக்கிறது.
மேலும் விதைகளில் பிற ரகக் கலப்பு காணப்பட்டு வயல்களில் பயிர் வளர்ச்சி சீராக இல்லாமல் இருக்கும். விதை தரமாக இல்லையென்றால் நாம் எவ்வளவு உரமிட்டாலும், பூச்சிமருந்து பயன்படுத்தினாலும் அது எந்தப் பலனையும் தராது.
எது நல்ல விதை? (Which is the better seed?)
-
நல்ல விதை என்பது, பாரம்பரியத் தூய்மையுடையதாக, அதிகபட்ச புறத்தூய்மை கொண்டதாக, தேவையான முளைப்புத்திறன் கொண்டதாக, அனுமதிக்கப்படும்.
-
ஈரத்தன்மை உடையதாக, பூச்சி, நோய்த் தாக்குதல் இல்லாத விதையாக இருத்தல் வேண்டும். இத்தகையக் குணங்களை உடையதாக இருந்தால்தான் அது நல்ல விதை ஆகும்.
-
இவ்வாறான நல்ல விதைக் குணங்கள், நமக்கு தமிழக அரசின் விதைச்சான்றுத் துறையால் வழங்கப்படும் விதைகளில் கிடைக்கும்.
சான்று பெற்ற விதைகள் (Certified seeds)
சான்று பெற்ற விதைகள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும் அரசு விதைச்சான்றுத் துறையில் விதை விற்பனை உரிமம் பெற்ற தனியார், கூட்டுறவு நிறுவனங்களிலும் கிடைக்கும். எனவே, சம்பா சாகுபடிக்கு நெல் விதை வாங்கும்போது மேற்கண்ட விவரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
வாழைப்பழத்திற்கு இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும்? TNAU கணிப்பு!
அறுவடை நெல் பாதிக்க விடக்கூடாது- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!