தென்னிந்திய உணவுவகைகள் என்றால், அதில் இட்லி, வடை, பொங்கல், சாம்பார் பிரதான இடம்வகிக்கும். அதிலும் எண்ணெயில் சுடச்சுட பொறித்து எடுக்கும் உளுந்து வடை தன்னகிரற்ற சுவையைக் கொண்டது.
அதேபோல் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரின் பிடித்தமான இந்திய உணவு என்றால் அதில் இவற்றுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். குறிப்பாக தமிழக உணவுகளின் மகுடமாகத் திகழும் இட்லி, வடைக்கு ஆதாரமே உளுந்துதான். (Urad dal)
மேலும் தோசை, பப்படம், முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து, எப்போதுமே முக்கிய பங்கு வகிக்கிறது.
பூர்வீகம்
வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம் உளுந்து.உளுந்து தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. எனினும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டு வருகிறது.
இரகங்கள்
டி 9, கோ 5, வம்பன் 1, வம்பன்2, டிஎம்வி 1, ஏடிடீ 5, ஆடுதுறை 5 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை ஆகும்.
பருவம்
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உளுந்து சாகுபடி செய்யலாம்.
மண்
தண்ணீர் தேங்காத செம்மண் வகைகள் ஏற்றது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழவு செய்து சமன்படுத்த வேண்டும். நில மேம்பாட்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழு உரம் 12.5 டன் ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.
விதையளவு
ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ விதையைப் பயன்படுத்துவதே நல்லது.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் கார்பன்டாசிம் (அ) திராம் 2 கிராம் ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்க (Sowing) வேண்டும்.
விதைத்தல்
விதைகளை 30×10 செ.மீ இடைவெளியில் மானாவாரியாக விதைக்க வேண்டும். அதன்பின் தேவைக்கேற்ப பார்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். வரப்பு ஓரங்களில் பயிரிடுவதாக இருந்தால் 30 செ.மீ இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டியது அவசியம்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாவது நாளில் உயிர்த் தண்ணீரும் (water Management) பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
பயிரின் எல்லா நிலைகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அதேநேரத்தில் துளிர்க்கும் பருவத்தில் வறட்சி இருந்தால் 0.5 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
விதைப்பதற்கு முன் அடியுரமாக மானாவாரிப் பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும்.
மானாவாரி மற்றும் இறவைப் பயிர்களுக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் அல்லது யூரியா 2 சதவீதம் பூக்கும் தருணத்திலும் பின்பு 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்
களை முளைப்பதற்கு முன் களைக் கொல்லியான பென்டிமெத்தலின் பாசன நிலையில் ஏக்கருக்கு 3.3 லிட்டர், மழை நேரமாக இருந்தால் 2.5 லிட்டரை விதைத்த மூன்றாம் நாள் ஒரு ஹெக்டேருக்கு 500 லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
அல்லது களை முளைத்த பின் தெளிக்கும் களைக் கொல்லியான குயிசல்பாப் மருந்தை ஒரு ஹெக்டேருக்கு 50 கிராம் வீதம் விதைத்த 15 அல்லது 20ம் நாளில் தெளிக்க வேண்டும்.
களைக்கொல்லித் தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15வது நாளிலும் மற்றும் 30-வது நாளிலும் கைக்களை எடுக்க வேண்டும்.
பாசன உளுந்துக்கு களை முளைக்கும் முன் ஐசோப்ரோட்ரான் ஹெக்டேருக்கு 0.5 கிலோ அளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து விதைத்த 30வது நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
இலை வழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்ஏஏ 40 மில்லி கிராம் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும், 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும். அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்கவேண்டும்.
நெல் தரிசு பயறுவகைப் பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் டிஏபி 20 கிராம் பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
அறுவடை
முதிர்ந்த காய்களைப் பறித்து உலர்த்த வேண்டும். அறுவடை செய்யும்போது பயிர்களை வேரோடு பிடுங்க வேண்டும். இல்லையெனில் முழு தாவரத்தையும் வெட்டி எடுக்க வேண்டும். பின்னர் குவித்து வைத்து உலர்த்தி பயிர்களை பிரிக்க வேண்டும்.
மகசூல்
ஒரு ஹெக்டேருக்கு 250 – 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
உளுந்துடன் ஊடுபயிராக தட்டப்பயிர் சாகுபடி செய்யலாம்.
உளுந்தின் மருத்துவப் பயன்கள்:-
-
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ,உளுந்தங்கஞ்சியாகவோ (Ulundu kanji)அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும். அதுமட்டுமல்ல, எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
-
உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும் (benefit of ulundu).
-
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.
-
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
-
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
-
உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
-
4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்துத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
-
ஆக அகமும், புறமும் நலம் பெற, உளுந்தைத் தவறாமல் உணவில் எடுத்துக்கொள்வோம்.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு