நிலக்கடலை பயிரில் சான்று விதைப்பண்ணை அமைத்து, விதை உற்பத்தி செய்வதன் மூலம், வேளாண்மைத் துறையின் மானியத்தினை பெற்று அதிகமான லாபம் ஈட்ட முடியும்.
விதைச்சான்று (Seed certificate)
அவ்வாறு நிலக்கடலை சாகுபடியில் அதிக லாபம் ஈட்ட பின்வரும் விதைச்சான்று நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம்.
விதைப்பு (Sowing)
நிலக்கடலை பயிரில் அறிக்கை செய்யப்பட்ட இரகங்களை பெற்று, விதைப்பு செய்ய வேண்டும்.சான்று விதை உற்பத்தி செய்ய முதலில் விதைப்பண்ணை பதிவு செய்ய வேண்டும்.
கட்டணம் (Fee)
உரிய படிவத்தில் மூன்று நகல்களில் விதைப்பு அறிக்கை பூர்த்தி செய்து, விதைப்பண்ணை கட்டணமாக ஒரு ஏக்கருக்கு பதிவுக் கட்டணம் ரூ.25/-ம், வயலாய்வு கட்டணம் ரூ.50/-ம் விதைப்பரிசோதனைக் கட்டணம் ரூ.30/-ம் செலுத்தி, விதைச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
விதை ஆதாரம் (Seed proof)
விதைப்பண்ணை பதிவு விண்ணப்பத்தோடு, மூல விதைக்கான சான்றட்டைகள், விதை வாங்கியதற்கான இரசீது ஆசியவை விதை ஆதாரத்திற்காக இணைக்கப்பட வேண்டும்.
அறுவடை ஆய்வு (Harvest study)
விதைப்பு அறிக்கை பதிவானவுடன், அது உரிய விதைச்சான்று அலுவலருக்கு அனுப்பப்படும். பிறகு விதைச்சான்று அலுவலரால் முறையே 60, 90 நாட்களில் பூப்பருவ ஆய்வு மற்றும் அறுவடை ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கலப்பு நீக்கம் (Mixed removal)
ஆய்வின் போது பிற இரக கலப்பின்றி இருத்தல் அவசியம். பிற இரக கலப்பு இருப்பின் அவற்றை விதைச்சான்று அலுவலர்களின் உதவியுடன் இனங்கண்டு அவற்றை அவ்வப்போது முழுமையாக நீக்க வேண்டும்.
பயிர் விலகு தூரம் 3 மீட்டர் என இருந்த போதிலும் கலப்பின்றி தூய்மையாக உள்ள விதைகளை முறையாக அறுவடை செய்து சுத்தம் செய்து காயவைக்க வேண்டும்.
பின்னர், விதைத்த 135 நாட்களுக்குள் விதைச்சான்று அலுவலரால் குவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வில் பொக்கு விதைகள் 4 விழுக்காடு அளவிற்குள் இருக்குமாறு சுத்தமாக இருக்க வேண்டும். அவ்வாறு சுத்தமான விதைகளை புதிய சாக்குப்பைகளில் அடைத்து சீல் இட்டு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு விதைச்சான்று அலுவலரின் சுத்தி அறிக்கையுடன் அனுப்பி வைக்கப்படும்.
பகுப்பாய்வு (Analysis)
வேளாண்மை விரிவாக்க மையத்தில், விதை மாதிரி எடுக்கும் நடைமுறைப்படி, விதை மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பப்படும். பகுப்பாய்வு தேர்வில் குறைந்த பட்சம் முளைப்புத்திறனில் 70 விழுக்காடு தேர்ச்சி பெற்ற விதைக் குவியலுக்கு சான்று அட்டை வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு விநியோகம் (Distribution to farmers)
இவ்வாறு சான்று பெற்ற விதைக்குவியல் அடுத்த பருவத்திற்கு விவசாயிகளுக்கு விதைக்காக விநியோகிக்கப்படும்.
மேற்கண்ட மாதிரி விதைச்சான்று நடைமுறைகளை பின்பற்றி, நிலக்கடலை விதைப்பண்ணை, அமைப்பதால், கலப்பட மில்லாத தரமான விதைகளை உற்பத்தி செய்வதன் மூலம், அதிகமான மகசூலும் கூடுதலான லாபமும் அடைந்து விவசாயிகள் அதிக பயனடையலாம்.
தகவல்
தி.கௌதமன்
விதைச்சான்று உதவி இயக்குநர்
சேலம் மாவட்டம்
மேலும் படிக்க...
நவீன இயந்திரங்கள் வரமா? சாபமா? அழிவின் விளிம்பில் உழவு மாடுகள்!
கோழி குஞ்சு வடிவிலான தக்காளி! விற்பனைக்கு வந்ததால் ஆச்சரியம்!