திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள அணவயல், நெடுவாசல், கறம்பகாடு, கீரமங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
காண்டமிருக வண்டுகள்
தென்னை மரங்களை தாக்கும் பூச்சி வகைகளில் அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது இந்த காண்டாமிருக வண்டு (palm rhinoceros beetle). இதன் தாக்குதல் தென்னை மட்டுமின்றி பாக்கு, எண்ணெய் பணை, ஈச்சை மரம் ஆகியவற்றிலும் காணப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளிலும் இந்த வண்டின் தாக்குதல் காணப்படுகிறது.
காண்டாமிருக வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பாகத்தினை துளையிட்டு உள்ளே இருக்கும் மொட்டு பகுதியை தின்று விடும், இதனால் எஞ்சிய குருத்து விரியும்போது தென்னை மட்டை முக்கோண வடிவில் சீராக கத்திரியால் வெட்டியதுபோல் இருக்கும், மொட்டுப்பகுதியை மென்றபின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது. சில சமயங்களில் இளம் கன்றுகளின் குருத்து அழிந்து விடுவதனால் மரம் வளர்ச்சி குன்றி காணப்படும்
தென்னை மரங்கள் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னைப்பயிர் சாகுபடி சுமார் 9,336 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவரங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட அணவயல், நெடுவாசல், கறம்பகாடு, கீரமங்கலம் ஆகிய பகுதிகளிலுள்ள தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட புதுக்கோட்டை மாவட்ட தரக்கட்டுபாடு வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராஜசேகரன், ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கண்டாமிருக வண்டுகளை தடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
கட்டுப்படுத்தும் முறைகள்
-
தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறபடுத்திடவேண்டும். இல்லையெனில், அதில் காண்டமிருக வண்டின் புழுக்கள் வளர ஏதுவாக இருக்கும்.
-
எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள் புழுக்கள், கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
-
இரவு நேரங்களில் விளக்குப் பொறியினை தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
-
ரைனோலியூர் இனக்கவர்ச்சி பொறியினை ஹெக்டருக்கு 5 எண்கள் என வைத்து வண்டுகளை அதிக அளவில் கவர்ந்து அழிக்கலாம்
-
வேப்பங்கொட்டை தூளையும், மணலையும் 1:2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் அல்லது ரசகற்பூரம் (அந்து உருண்டை) 3 எண்களை நடுகுருத்தின் மட்டை இடுக்குளில் வைக்கலாம்.
-
ஒரு மண்பானையில் 5 லிட்டர் நீருடன் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
-
பேக்குலோ எனப்படும் வைரஸ் காண்டாமிருக வண்டுகளை அழிக்க வல்லது. 10-15 வண்டுகளை இவ்வைரஸ் கரைசலுக்குள் நனைத்து தென்னந்தோப்புக்குள் விடுவதன் மூலம், அது மற்ற வண்டுகளுக்கும் பரவி, கணிசமான அளவில் வண்டுகளை அழித்துவிடும்.
-
தென்னந்தோப்புகளின் அருகில் மக்கும் நிலையில் உள்ள பொருட்கள், உரக்குழிகள் போன்றவற்றை இல்லாமல் செய்வதன் மூலம் புழுக்கள் உண்டாகாமல் தடுக்கலாம்.
மேலும் படிக்க...
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் - அமைச்சர் காமராஜ்!
கலப்பினம் இல்லாத பாரம்பரிய நெல் ரகங்கள்
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!