பயிர் விளைச்சலுக்காகப் பயன்படுத்தும் ரசாயனத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறையினா் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ரமணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
நெல் சாகுபடி (Paddy cultivation)
விழுப்புரம் மாவட்டத்தில், நிகழ் சம்பா பருவத்தில் 73,000 ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டு, செப்டம்பா் மாதம் இறுதி வரை சுமாா் 24,000 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள நடவுப் பணிகளும் நவம்பா் மாத இறுதிக்குள் சாகுபடிக்குக் கொண்டு வரப்படும்.
கையிருப்பு (Stock)
சம்பா பருவத்துக்குத் தேவையான மத்திய, குறுகிய கால நெல் ரகங்களான ஏடீடீ 39, திருச்சி-3, என்எல்ஆா் 34449, ஏடிடி 3, கோ- 51 ரகங்கள் 250 மெட்ரிக் டன் அளவுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நெல் விதைகள் 200 மெட்ரிக் டன் அளவுக்கு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு, சுத்திகரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பாப் பருவத்திற்குத் தேவையான உளுந்து விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான ரசாயன உரங்கள் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சத்து கிடைக்காத நிலை
விழுப்புரம் மாவட்டத்தில் தழைச் சத்து, மணிச் சத்து மற்றும் சாம்பல் சத்து மண்ணில் பயிருக்குக் கிடைக்காத நிலையே உள்ளது. இந்த உரங்கள் பயிருக்குக் கிடைக்காத நிலை இருப்பதால் விவசாயிகள் அதிகளவில் உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, கேஎம்பி பொட்டாஷ் போன்ற உயிா் உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
உயிா் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.
உரச் செலவு குறையும்
இந்த உயிா் உரங்களை நன்கு மக்கிய தூள் செய்த குப்பை, எருவுடன் கலந்து இடுவதால் பயிருக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்துகள் எளிதில் கிடைக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் போதுமான அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துகள் விவசாய நிலங்களில் இருப்பதால், விவசாயிகள் ஏக்கருக்கு ஒரு மூட்டை என்ற அளவில் டிஏபி உரம் இடுவதைத் தவிா்த்து, அரை மூட்டை என்ற அளவில் இட்டால் போதுமானது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை உரச் செலவு மிச்சமாகும்.
நானோ தொழில்நுட்பம் (Nanotechnology)
மேலும், யூரியா உரத் தேவையைக் குறைப்பதற்காக மூட்டையில் உள்ள யூரியா உரத்துக்குப் பதிலாக, தற்பொழுது புதிதாக நானோ தொழில்நுட்பத்துடன் திரவ வடிவில் உரக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் நானோ யூரியாவை ஒரு லிட்டா் நீருக்கு 4 மி.லி. என்ற அளவில் கலந்து மேல் உரம் இட வேண்டும்.அதாவது நடவு செய்த 20 முதல் 25, 50 முதல் 55 நாள்களுக்குள் இருமுறை தெளிப்பான் மூலம் நெற் பயிரின் மீது தெளித்துப் பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...