மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, பயனடையுமாறு வேளாண்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
1,200 ஏக்கரில் சாகுபடி
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அதனை ஒட்டிய, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நிமிட்டிபாளையம், சின்னமல்லான்பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் அதிளகவில் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக,தக்காளி, கத்தரி, அவரை, வெண்டை, கீரை, பீர்க்கன், புடலை, பாகல் போன்ற காய்கறி பயிர்களும், மா, வாழை, கொய்யா, நெல்லி போன்ற பழ வகைகளும், 1,200 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.
இயக்குனர் ஆய்வு
பெருந்துறை உழவர் சந்தையிலும், அதனை ஒட்டிய வருவாய் கிராமங்களிலும் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளை சந்தித்துப் பேசிய அவர், இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை, உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என்றார்.
ஊக்கத்தொகை
பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தவும், காய்கறி வரத்தை அதிகரிக்க மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...