விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாடு அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இயந்திர வரிசை நெல் நடவு சாகுபடியில், களைகளைக் கட்டுப்படுத்துவதில் கோனோவீடர் மிகவும் உதவிகரமாக உள்ளது.
பயிருக்கு இடையூறு (Disruption to the crop)
முதன்மை உணவுப் பயிரான நெற் பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். எப்போதுமே பயிருடன் போட்டிப் போட்டுக்கொண்டு, களையும் வளருமல்லவா, அத்தகையக் களைகள் நெல் சாகுபடியில் பயிருக்கு இடையூறாக இருப்பதுடன், அவற்றுக்கு அளிக்கப்படும் அனைத்துச் சத்துக்களையும் எடுத்துக் கொள்கின்றன.
இதனால் பயிர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் குறைந்து அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.
கோனோவீடர் (Conoweeder)
எனவே, இந்த களைகளைக் கட்டுப்படுத்த அதிகளவில் வேலை யாட்கள் தேவைப்படுகிறது. தற்போது உள்ள விவசாய சூழலில் வேலையாட்கள் பற்றாக்குறையால் தேவையான ஆட்களும் கிடைப்பதில்லை.
இதற்கு மாற்றாக நெல் வயலில் கோனோவீடர்களைக் கருவியை வயலில் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பயன்படுத்துவது எப்படி?
இந்தக் கருவியை திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர வரிசை நடவு சாகுபடியில் பயன்படுத்தலாம்.
நெல் நடவு செய்ததில் இருந்து 10,20,30,40ம் நாட்களில் களைக் கருவியை இரு வரிசைகளுக்கு நடுவே குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும்.
பயிர் வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் முன்னும் பின்னுமாக இக்கருவியை இழுத்து இயக்குவதன் மூலம் களைகள் மண்ணில் அமுக்கி விடப்படுகின்றன.
கோனோவீடர் மூலம் உழவு (Plowing with conoweeder)
எனவே களைச் செடிகளால் எடுத்து கொள்ளப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் மண்ணிற்கே திரும்புகின்றன. கோனோவீடர் மூலம் இடையில் உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும், செயல்பாடும் படிப்படியாக அதிகரிக்கிறது.
தூர் கட்டும் தன்மை
நெற் பயிரின் வேர் எளிதில் தூர் கட்டும் தன்மை நன்கு தூண்டி விடப்படுகிறது. இதன் மூலம் களை கட்டுப்படுவதுடன் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது.
தகவல் : மா.சேர்மராஜா. மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் து றை, வேளாண் கல்லூரி, கிள்ளிக்குளம்.
மேலும் படிக்க...