CSIR- தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Botanical Research Institute-NBRI) 108 இதழ்கள் கொண்ட தேசிய மலர் தாமரையின் மேம்படுத்தப்பட்ட வகையை அறிமுகப்படுத்தி, 77-வது சுதந்திர தினத்தன்று நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளது. இந்த தாமரைக்கு 'நமோஹ் 108' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
CSIR-NBRI ஆனது தாமரை நாரால் செய்யப்பட்ட ஆடைகளையும், தாமரை செடிகளிலிருந்து உருவாக்கப்பட்ட வாசனை திரவியத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், பருத்தி சாகுபடி குறித்த அனைத்து தகவல்களையும் கொண்ட சிப் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிப்பானது பருத்தி பற்றி மேற்கொள்ளும் கூடுதல் ஆராய்ச்சிக்கு உதவும் என கூறப்படுகிறது.
திங்களன்று தொடங்கிய NBRI-ன் வார விழாவான ‘ஒரு வாரம் ஒரு ஆய்வகத் திட்டத்தில்’ (One Week One Lab Programme) ‘நமோஹ் 108’ - Namoh 108 ஐ சிஎஸ்ஐஆர் டைரக்டர் ஜெனரல் (டிஜி) என் கலைச்செல்வி அறிமுகப்படுத்தினார்.
”தாமரை நமது தேசிய மலர். பல்வேறு மதம் தொடர்பான பூஜை, விழாக்களிலும் தாமரைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும் 108 என்ற எண் மத வழக்கப்படி முக்கியத்துவம் வாய்ந்தவை. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட மலருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக" என்று CSIR DG கூறினார்.
தேசிய மலரின் மேம்படுத்தப்பட்ட வகை மணிப்பூருடன் தொடர்பைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது வடகிழக்கு மாநிலத்திலிருந்து என்பிஆர்ஐ விஞ்ஞானிகளால் ஆராய்ச்சி செய்ய கொண்டு வரப்பட்டது. ஆராய்ச்சியின் குறித்து பேசிய CSIR DG, “மரபணு மாற்ற வகையில் இது முதல் தாமரை வகையாகும். நமது பல பூக்கள் மற்றும் தாவரங்கள் அழிந்து போனதைப் போல இந்தத் தாவரம் ஒருபோதும் அழிந்துவிடாது” என்றார்.
திட்டத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான டாக்டர் கே.ஜே. சிங் கருத்துப்படி, மேம்படுத்தப்பட்ட நமோஹ் 108 ரகமானது மற்ற பூ வகைகளை விட அதிகப்படியான வானிலையை தாங்கக்கூடியது. எல்லா காலத்திலும் வளரக்கூடியது. "இது மார்ச் முதல் டிசம்பர் வரை மட்டுமே பூக்கும் மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது இது மிக நீளமான பூக்கும் வகையாகும்" என்று டாக்டர் சிங் கூறினார்.
CSIR-NBRI ஆனது தாமரை நாரால் செய்யப்பட்ட ஆடைகளையும், தாமரை செடிகளில் இருந்து உருவாக்கப்பட்ட 'Frotus' வாசனை திரவியத்தையும் இவ்விழாவில் அறிமுகப்படுத்தியது.
அலோ வேரா வகை அறிமுகம்:
Namoh 108 தாமரை போன்று அலோ வேராவின் புதிய வகை ‘என்பிஆர்ஐ-நிஹார்’ இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ரகமானது சாதாரண கற்றாழையுடன் ஒப்பிடுகையில் 2.5 மடங்கு அதிக ஜெல் தன்மையினை கொண்டுள்ளது மற்றும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களாலும் குறைவாகவே பாதிக்கப்படுகிறது.
பொதுவான இருமல் மற்றும் சளியைக் குணப்படுத்தும் 'ஹெர்பல் கோல்ட் டிராப்ஸ்' & 'ஹெர்பல் ஆன்டி-டண்ட்ரஃப் ஷாம்பு' ஆகிய இரண்டு மூலிகை தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. NBRI பருத்தி தொடர்பான கூட்டு ஆராய்ச்சிக்காக ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நியூக்ளியோம் இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க: