நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை, எளிதாக நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமது உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் கிடைக்கும். கொரோனா காலகட்டத்தில், நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம்.
ஏனேனில், வீட்டை விட்டு வெளி வருவதே சவாலாகி வரும் சூழ்நிலையில், இம் மாடித்தோட்டம் நமக்கு கை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மாடித்தோட்டத்தில் பச்சைமிளகாய் பயிரிடும் முறையை அறிந்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் (Required things)
-
Grow Bags அல்லது இதற்கு மாறாக Thotti
-
அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம் அல்லது காய்கறி கலிவால் ஆன உரம், செம்மண்.
-
நாற்றுகள் அல்லது விதைகள்
-
சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி அல்லது இதற்கு மாறாக பூவாளி தெளிப்பான்
தொட்டிகள் (Troughs)
மிளகாய் செடி வளர்க்க தொட்டிகளுக்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவை இல்லை.
இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைத்தல் வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைத்தல் கூடாது. 7லிருந்து 10 நாட்களில் மண் காய்ந்ததும், நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்க ஆரம்பிக்கும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும், அப்போதுதான் ரிஸல்ட் கிடைக்கும்.
விதைக்கும் முறை (Sowing method)
மிளகாய்க்கு, வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொண்டால் நல்லது. இதனை சிறு பைகளில் அல்லது குழி தட்டுகளில் விதைத்து நீர் தெளித்து வர வேண்டும். 20 முதல் 25 நாட்கள் ஆன நாற்றுகளை பைகளுக்கு மாற்ற வேண்டும்.
நாற்றுகளாக இருந்தால் அப்படியே பைகளில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகத்தின் முறை (Method of water management)
நாற்றுகளை நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். நீர் ஊற்றும்போது மண் காய்ந்த பின் ஊற்றுகிறீர்களா என கவனம் செலுத்த வேண்டும்.
உரம் விவரம் (Fertilizer Profile)
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ளவும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட, செடிக்கான உரம் சீராக கிடைக்க உதவும். இதுவே அடி உரமாகவும், இது பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளித்துக்கொள்ளலாம். மேலும் சமையலறை கழிவுகளை அதாவது காய்கறி பழங்களின் தோலை உரமாக இடலாம். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் ஆகியவற்றையும் செடிகளுக்கு ஊற்றலாம், இதுவும் உரமாக செயல்படுகிறது.
பாதுகாப்பு முறைகள் (Security Methods)
செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கொத்தி விட வேண்டும், இதனால் மண்ணின் வளம் அதிகரிக்கும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது என்பது குறிப்பிடதக்கது.
அறுவடை (Harvest)
மேல் கண்ட அனைத்து முறைகளையும் சரிவர செய்தால், செடி நன்கு வளர்ந்து காய் கொடுக்க தொடங்கும். காய்கள் திரண்டவுடன் பச்சை மிளகாய்களை அறுவடை செய்துக்கொள்ளலாம். வற்றல் மிளகாய்களுக்கு, பழங்களை பழுக்கவிட்டு அறுவடை செய்ய வேண்டும்.
மேலும் படிக்க:
பண்டிகைகளை முன்னிட்டு தங்கத்துடன் போட்டியிடும் மல்லிகைப்பூ!
தேசிய இளைஞர் தினம்: 'அக்ரிடெக்-இல் இளைஞர்களின் தாக்கம்', பல கருத்துக்கள்