பார்த்தீனியச் செடிகளைப் பக்குவமாக மாற்றி உரமாகப் பயன்படுத்துவதன் மூலம் அதன் தீமையில் இருந்து அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க முடியும்.
பார்த்தீனியம்
பாரபட்சமின்றி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் செடி என்றால் அது பார்த்தீனியம்தான். இந்த செடியினால் ஆஸ்த்துமா, தொழுநோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மனிதனுக்கு உண்டாகிறது. கால்நடைகள் செடிகளின் வழியாக நடக்கும்போது அல்லது அதை நுகரும்போது காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகின்றது.
கட்டுப்படுத்த வழிகள் (Ways to control)
-
இவ்வகை பார்த்தீனியக் களைகளை கட்டுப்படுத்த அட்ரசின் களைக்கொல்லி 4 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் எக்டருக்கு 500 லிட்டர் நீரில் கலந்து களைகள் முளைக்குமுன் தெளிக்க வேண்டும்.
-
சமையல் உப்பு 200 கிராம் + 2 மி. லி சோப்பு திரவத்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து களைகளின் மீது நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டுத் தெளிக்கவும்.
-
கிளைபோசேட் 10 மி.லி +20 கிராம் அமோனியம் சல்பேட் + 2 மி.லி சோப்பு திரவம் 1 லிட்டரில் கலந்து பூப்பதற்கு முன் தெளிக்க வேண்டியது அவசியம்.
-
பொதுவாக பார்த்தீனியச் செடிகளைக் கையுறை கொண்டு அல்லது கருவி உபயோகித்து பூப்பதற்கு முன் களைகளை வேருடன் அகற்றிவிட வேண்டும்.
-
பின்னர் அதை மட்கச்செய்து இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம்.
இயற்கை உரம் தயாரித்தல்
-
பார்த்தீனிய செடிகளை 5 முதல் 10 செ.மீ அளவு சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி அடுக்கக் கொள்ளலாம்.
-
இவற்றின் மேல் 10 சதவீத மாட்டு சாணக் கரைசலைக் கொண்டு சமமாகத் தெளிக்க வேண்டும்.
-
இவற்றை 10 நாட்கள் மட்க விட்டு அதன்பிறகு 250 முதல் 300 மண்புழுக்களை விட்டு ஈரப்பதம் 60 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
பார்த்தீனிய மக்கு உரம் 40 முதல் 60 நாட்களில் தயாராகி விடும்.
சத்துக்கள்
இந்த உரத்தில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 1.15, 0.44, 0.97 சதவீதமாக உள்ளது. இது தொழு உரத்தைக் காட்டினும் அதிகமாக உள்ளது.
வேஸ்ட் டீகம்போஸர் கரைசலைக் கொண்டு பார்த்தீனியச் செடியினை மக்க வைக்கலாம்.முதலில் 5 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ வெல்லத்தை நன்குக் கரைத்து பின்பு அதனுடன் 195 லிட்டர் சுத்தமான நீரைச் சேர்க்க வேண்டும்.
இதனுடன் வேஸ்ட் டீகம்போஸர் தாய்வித்தைக் கலந்து வலது மற்றும் இடது புறமாக சுத்தமானக் குச்சி கொண்டு காலையும், மாலையும் இரண்டு முறைக் கலக்க வெண்டும்.சுத்தமானத் துணி கொண்டு வாய்ப் பகுதியினை மூடிவிட வேண்டும்.பத்து நாட்களில் வேஸ்ட் டீகம்போஸர் திரவம் தயாராகி விடும்.
அறிவுறுத்தல்
அனைத்துத் தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பார்த்தீனியத்தை மேற்கூறிய முறைகளைப் பயன்படுத்தி அதன் பாதிப்பை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர் சீ. கிருஷ்ணகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர்,முனைவர் இராமசுப்பிரமணியன் ஆகியோர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் படிக்க...
ஒரு லிட்டர் பெட்ரோலில் 102 km வரை செல்ல கூடிய 3 சூப்பர் பைக்குகள்