நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாம் பருவ மலர்காட்சிக்கான செடிகள் நடவு செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் நேற்று (17.07.2023) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் மிகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று நீலகிரி மாவட்டத்தின் உதகை தாவரவியல் பூங்கா. ஓவ்வொரு ஆண்டும் இரண்டு பருவங்களில் இங்கே தோட்டக்கலைத் துறை சார்பில் நடத்தப்படும் மலர் கண்காட்சியினை காண குடும்பத்தோடு பலர் வருகை தருவார்கள்.
இந்நிலையில் நடப்பாண்டின் இரண்டாம் பருவ மலர் கண்காட்சிக்கான செடிகளை நடவு செய்யும் பணியினை நேற்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர் மலர் கண்காட்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அளித்த தகவல்கள் பின்வருமாறு-
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் இரண்டாம் பருவமானது செப்டம்பர் மாதத்தில் தொடங்குவதை முன்னிட்டு, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலர்காட்சிக்கான செடிகள் நடவு செய்யும் பணியானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இம்மலர்காட்சிக்காக நாட்டின் பிற மாநிலங்களான கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், பூனே, பெங்களூரூ போன்ற இடங்களிலிருந்து இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லூபின், கேன்டீடப்ட், காஸ்மஸ், கூபியா, பாப்பி, ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம், கிரைசாந்தியம், கேலண்டுலா, ஹெலிக்ரைசம், சப்பனேரியா, பெடுனியா போன்ற 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டு உள்ளது.
மேலும் பூங்காவிலேயே விதைகள் உற்பத்தி செய்யப்பட்டும் சுமார் 4 இலட்சம் வண்ண மலர்செடிகள் இரண்டாம் பருவ மலர்காட்சிக்காக மலர்ப்பாத்திகளில் நடவு செய்யும் பணியும், 15,000 மலர் தொட்டிகளில் சால்வியா, டெய்ஸி, டெல்பினியம், டேலியா, கேலா லில்லி, ஆந்தூரியம் போன்ற 30 வகையான மலர் செடிகள் நடவு செய்யும் பணியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்மலர் தொட்டிகள் மலர்காட்சி திடலில் அடுக்கி வைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக ஒரு மாத காலம் வரை திறந்து வைக்கப்படவுள்ளது.
இவ்வருடம் சுமார் 3 இலட்சம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் இதனை கண்டுகளித்து செல்லுமாறு நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கையும் விடுத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை வட்டாட்சியர் சரவணக்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு இரண்டாம் பருவ மலர்காட்சியானது செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
தக்காளி விலையை குறைக்க ஹெச்.ராஜா கொடுத்த ஐடியா- நெட்டிசன்கள் கிண்டல்