காய் வகைகளில் அனைத்துத் தரப்பினரும் விரும்பி உண்ணுவது பீர்க்கங்காய். கொடி வகையான இந்தப் பயிரின் வளர்ச்சிக்கு பந்தல் அமைப்பது அவசியமாகும்.
குறைந்த முதலீட்டில் பீர்க்கங்காய் பயிரிட்டு, ஒரு ஹெக்டேருக்கு 14 முதல் 15 டன் வரை மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும்.
வகைகள்:
கோ 1, கோ 2, பி.கே.எம் 1.
மண், தட்பவெப்ப நிலை
பொதுவாக மண் பாங்கான தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளும் ஏற்றதாகும். இந்தப் பயிரை கோடை, மழைக் காலங்களிலும் சாகுபடி செய்யலாம். கோடைக் காலங்களில் வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது.
பருவம்
இந்தப் பயிருக்கு ஜூன், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் பருவ காலமாக உள்ளது. நாற்று ஜூலை மற்றும் ஜனவரி மாதங்களில் படர்கிறது
விதை அளவு:
எக்டருக்கு 1.5 கிகி விதை தேவைப்படுகிறது.
விதை நேர்த்தி:
டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 10 கி/கிகி விதைகள் கொண்டு விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
உரமிடுதல்:
10 கிகி தொழுவுரம் அளிக்கவும். 100 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 6:12:12 என்ற கலவையில் அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் அளிக்க வேண்டும் மற்றும் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு குழிக்கு 10 கிராம் என்ற அளவில் அளிக்கவும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா எக்டருக்கு 2 கிகி, சூடோமோனாஸ் எக்டருக்கு 2.5 கிகி இதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிராம் உழுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
நிலம் தயார்படுத்துதல்
45 x 45 x 45 செ.மீ அளவில் 2 மீ இடைவெளி மற்றும் 1.5 மீ வரிசை இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிக்கு மூன்று விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். முளைவந்த பிறகு ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டு விட்டு மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும். நேரடி விதைப்பிற்கு பதிலாக, விதைகளை பாலீத்தின் பைகளில் ஒரு பைக்கு 2 விதைகள் என்ற அளவில் விதைக்கவும். முளைவந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும்.
பின் செய் நேர்த்தி
விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுகள் வளர்ந்த உடன், வாய்க்கால் மூலம் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கொடி வளர்ந்தவுடன் பந்தல் போட்டு கொடியைப் படர விட வேண்டும். எத்ரல் எனும் வளர்ச்சி ஊக்கியை 250 பிபிஎம் என்ற அளவில் இரண்டு இலைப் பருவத்தில் தெளிப்பதால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை மீண்டும் 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
விதை ஊன்றிய 30 நாள் கழித்து 50 கிலோ யூரியாவை மேலுரமாக இட்டு மண் அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
சொட்டு நீர் பாசனம்:
சொட்டு நீர் பாசனம் அமைக்க முக்கிய மற்றும் கிளை குழாய்கள் அமைக்கவும் மற்றும் 1.5 மீ இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கவும். பக்கவாட்டு சொட்டு நீர் குழாய்களை 60 செ. மீ மற்றும் 50 செ.மீ இடைவெளி விட்டு முறையே மணிக்கு 4 மற்றும் 3.5 லிட்டர் திறன் கொண்ட குழாய்களைப் பதிக்க வேண்டும்.
உரப்பாசனம்:
எக்டருக்கு 250:100:100 கிகி என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை பயிரின் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
களை கட்டுப்பாடு
களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும். 2 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய தாவரத்திற்கு தாங்கிகளை அமைக்க வேண்டும். விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு எத்தரால் 250 பி.பி.எம் (2.5 மிலி /10 லி நீர்) வார இடைவெளியில் நான்கு முறை அளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
வண்டுகள், பழ ஈக்கள் மற்றும் புழுக்கள்:
டைக்ளோர்வோஸ் 76% ஈ. சி 6.5 மிலி/10லி அல்லது டிரைகுளோரோபன் 50% ஈ. சி 1.0 மிலி/லி தெளிக்கவும்.
நோய்கள்:
சாம்பல் நோய்:
டைனோகேப் 1 மிலி/லி அல்லது கார்பன்டாசிம் 0.5 கி /லி தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அடிச்சாம்பல் நோய்:
மேன்கோசெப் அல்லது குளோரோதாலோனில் 2 கி/லி 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.
அறுவடை, மகசூல்
முதல் அறுவடை விதை ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் மகசூல் பெறலாம்.
அதைத் தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் 10 முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
விவசாயிகள் இந்த முறையைக் கடைப்பிடித்தால் ஒரு ஹெக்டேருக்கு 14 முதல் 15 டன் வரை மகசூல் பெற்று பயனடையலாம்.
சந்தை நிலவரம்:
பயிர் விளையும் மாவட்டங்கள் |
ஈரோடு, கோயமுத்தூர், திருப்பூர், |
தமிழ்நாட்டில் முக்கிய சந்தைகள் |
பெரியார் காய்கறி சந்தை, கோயம்மேடு, சென்னை, காந்தி சந்தை, ஒட்டன்சத்திரம், நட்சிபாளையம் காய்கறி சந்தை, கோயமுத்தூர் |