Horticulture

Friday, 04 October 2019 02:53 PM

கொத்தவரை எனும் கொத்தவரங்காய்  இது கொத்தாக காய்கள் காய்க்கும் செடி வகைகளுள் ஒன்று. இதற்கு சீனி அவரை எனும் வட்டார பெயரும் உண்டு. இச்செடி ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டிருந்தாலும் இந்திய மற்றும் பாகிஸ்தானில் அதிகம் பயிரிட படுகிறது. உணவிற்காக மட்டுமன்றி இது தீவன பயிராகவும், பசுந்தாள் உரப் பயிராகவும் பயன்படுகிறது.

அதோடு கொத்தவரை வேரில் உள்ள பாக்டீரியாக்கள் காற்றில் உள்ள நைட்ரோஜனை (Nitrogen) கவர்ந்து மண் வளத்தை மேம்படுத்துகிறது. இத்தகைய பல பயன்பாடுகளை கொண்ட கொத்தவரையை ஆண்டு முழுவதும் பயிரிட்டு நல்ல மகசூலும் அதிக லாபமும் பெறலாம்.

கொத்தவரை செடியை பயிர் செய்ய நல்ல வடிகால் வசதி கொண்ட மனர் பாங்கான நிலம் உகந்தது. கொத்தவரை எல்லா மண் வகையிலும் வளர்வது போல் உவர் நீர் மற்றும் உவர் மண்ணில் வளர்வது இதன் தனி சிறப்பாகும். கொத்தவரை வளர மிதமான சூரிய ஒளியும், மண்ணின் ஈரப்பதமும் குறையாமல் இருக்க வேண்டும். மண்ணின் கார் தன்மை 7.5 முதல் 8 வரை இருக்க வேண்டும்.

நிலத்தை நன்கு உழுது பண்படுத்திக் கொண்டு பின்னர் 45 செ.மீ (Cm) இடைவெளியில் பார்களை அமைத்து கொள்ளலாம். விதைக்கும் முன்பு விதைகளை ஆட்டூ ஊட்ட கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும், இதனால் விதைகள் நல்ல வீரியத்துடன் வளரும். இந்த விதைகளை 15 முதல் 30 நிமிடங்கள் வரை நிழலில் உலர்த்தி பக்கவாட்டில் 15 செ.மீ (Cm) இடைவெளியில் ஊன்ற வேண்டும். ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளை ஊன்றிய பிறகு நீர் பாய்ச்ச வேண்டும்.  அதன் பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்சலாம்.

கடைசி உழவின் போது 1 எக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன், தழை சத்து 50 கிலோ, மணி சத்து 50 கிலோ மற்றும் சாம்பல் சத்து 25 கிலோ அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 30 வது நாளில் 1 எக்டருக்கு 20 கிலோ தழை சத்தினை மேலுரமாக இட வேண்டும்.

கொத்தவரையை இலை தத்துப்பூ, காய்ப்புழு ஆகியவை அதிகம் தாக்கும். இதனை புகையிலை, பூண்டு கரைசலை பயன்படுத்தி தடுக்கலாம். இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் கலந்து பிஞ்சி பருவ மற்றும் காய் பருவங்களில் தெளிக்கலாம்.

கொத்தவரை நடவு செய்த 20 நாட்களில் பூ பூக்கத் தொடங்கி விடும். அடி கிளை வரை நுனி கிளை வரை அடுக்கடுக்காக காய்கள் இருக்கும். நேராக போகும் தண்டுகளை விட்டு விட்டு பக்க கிளைகளை அகற்ற வேண்டும். கொத்தவரை விதைத்த 45 நாட்களிலேயே காய்கள் அறுவடைக்கு தாயராகி விடும். காய்கள் முற்றி விடாமல் 2 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும். இதில் 5 முதல் 7 டன் வரை மகசூல் கிடைக்கும். 

K.Sakthipriya
Krishi Jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)